செட்ஸ் என அழைக்கப்படும் மஸ்னா முகமட் யூசோப்-பின் காணொளிப் பதிவு குறித்த செய்தி வெளியான பின்னர் அவரைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
38 வயதான முஸ்லிமான அந்த நாய் பயிற்றுநருக்கு கொலை மருட்டல்கள் கிடைத்துள்ளன. அவர் வாழும் பகுதியில் உள்ள இமாம் அவரை தாக்குவதற்கு முயன்றதாகச் சொல்லப்படுகின்றது. போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது குற்றவியல் சட்டத்தின் கீழும் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுகின்றார்.
அது குறித்து கருத்துரைத்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் எஸ் அம்பிகா, மஸ்னாவை போலீசார் அச்சுறுத்துவது குறித்து கவலை தெரிவித்தார்.
“நான் அவரது பாதுகாப்பு பற்றியும் அவருக்கு கிடைத்துள்ள மருட்டல்கள் பற்றியும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.”
அந்தக் காணொளியை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தனி நபர்களைப் பொறுத்தது என்றும் பெர்சே 2.0ன் தலைவரான அம்பிகா மலேசியாகினியிடம் சொன்னார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த காணொளிப் பதிவு மீது
போலீசார் எடுத்துள்ள வெகு வேகமான நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்த அவர் ஆளும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல், ஊழல் விவகாரங்களில் அந்த வேகம் இல்லை எனச் சொன்னார்.
“நல்ல சிந்தனை கொண்ட மலேசியர்களை வெறுப்படையச் செய்வது இது போன்ற விஷயங்கள் தான்,” என அம்பிகா வலியுறுத்தினார்.