‘குளியலறை விவகாரத்தில் பெற்றோரைக் குற்றம் சொல்வது பொறுப்பற்ற பேச்சு’

1 canteenஎஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தில் தகவல் சொன்னவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கூக்குரல் “அறியாமையையும் பொறுப்பின்மையையும்” காட்டுகிறது என்று மஇகா இளைஞர் பகுதி  செயலாளர் சி.சிவராஜ் சாடியுள்ளார்.

அரசியல் நோக்கத்துடன்  தலைமையாசிரியரைத் தற்காக்கும்  அம்னோ தலைவர்களும் என்ஜிஓ-களும்  விவகாரத்தை  திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“தனிப்பட்ட அரசியல் நலனுக்காக விவகாரத்தை அரசியலாக்குவதை விடுத்து எல்லாரும் சேர்ந்து உண்மைகளின் அடிப்படையில் அதற்குத் தீர்வு காண வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

தேசியப்பள்ளிகளில் இந்திய மற்றும் சீன மாணவர்கள் இழிவுப்படுத்தப்படுவதும், அச்சம்பவங்களைத் தற்காத்தும் அவற்றுக்கு நொண்டிச் சாக்குகள் கூறுவதும்  அவர்களின் “அறியாமையையும் பொறுப்பின்மையையும்”  காட்டுகிறது என்று கூறுவதும்கூட  ஒருவகையில் அந்த இன வெறியர்களைத் தற்காப்பதாகும் என்று பலர் கருதுகின்றனர்.

இந்திய மாணவர்களை இழிவுபடுத்தும் தேசியப்பள்ளி ஆசிரியர்கள் மலாய்க்காரர்கள். அவர்களைத் தற்காப்பவர்களும் பெரும்பாலும் மலாய்க்காரர்கள். அவர்கள்   இந்த இழியச் செயலை அறியாமலோ, தெரியாமலோ செய்யவில்லை. நாட்டின் இதர இனங்களை, அவர்களின் பண்பாடுகளை கீழ்த்தரமானதாக கருத வேண்டும் என்றும், மலாய்க்காரர்களின் மேலாண்மைக்குக்கீழ்தான் எல்லாம் என்றும் அவர்களுக்கு அரசாங்கம் போதித்து வருகிறது. மக்களில் வரிப்பணத்திலிருந்து பிரதமர்துறையின் பீரோ டாட்டா நெகாரா (பிடிஎன்) ஆண்டுக்கு பல மில்லியன் ரிங்கிட்களை செலவிட்டு  இப் போதனையை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கும் போதித்து வருகிறது என்பது ஊரறிந்த இரகசியம். ஆகவே, இந்திய, சீன மாணவர்களை இழிவுபடுத்துவது அவர்களின் கடமைகளில் ஒன்று.

இவ்வாறு மலாய்க்காரர்களின் மேலாண்மை ஓங்க உழைக்கும் இந்த ஆசிரியர்களை தற்காத்து, அவர்கள் சார்பில் மன்னிப்புக் கோரும் பாரிசான் அரசின் இந்திய துணை அமைச்சர்களும், முன்பு துணை அமைச்சர் டி. முருகையா; தற்போது பி. கமலநாதன், மற்றும் சில இந்திய தலைவர்களும்  அறியாமையால்தான் அவ்வாறு செய்கின்றனர் என்று கூறமுடியுமா?

தேசியப்பள்ளி ஆசிரியர்களின் இனவாதச் செயல்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது அவர்களுக்கு இன மேலாண்மையைத் திட்டமிட்டு போதிக்கும் பிதமர்துறையாகும். பிரதமர்துறைக்கு பொறுப்பான பிரதமர் நஜிப் இந்த இனவாத ஆசிரியர்களின் அநாகரிகச் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். அவரை பொறுபேற்கக் கோரும் உரிமை இதர பாரிசான் அமைச்சர்களுக்கு உண்டு, மஇகா அமைச்சர்கள் உட்பட. மசீசவினர் தற்போது அமைச்சரவையில் இல்லாததால் அரசாங்க விவகாரங்கள் குறித்து கடும் விமர்சனம் செய்கின்றனர். அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பது மஇகா தலைவர்கள் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப்பிடம் கேள்வி கேட்பதற்கு தடங்கலாக இருக்கிறது என்றால்,  அவர்கள் பதவி துறக்க வேண்டும். செய்வார்களா?