‘பிட்ச் மதிப்பீடு தற்காப்புச் செலவுகளை குறைக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது’

fitchபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் மலேசியாவுக்கு வழங்கியுள்ள ‘எதிர்மறையான  எதிர்கால’ மதிப்பீடு, நாடு விழித்துக் கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  என கெராக்கான் சொல்கிறது.

தேவையற்ற பில்லியன் கணக்கான ரிங்கிட் தற்காப்புச் செலவுகளை குறைக்க  வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அது தெரிவித்தது.

அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவுத்  திட்ட சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதன் தலைமைச்  செயலாளர் மா சியூ கியோங் ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

மிகவும் தளர்வான நிதிக் கொள்கையால் மலேசியாவின் கடன்கள் பெருகுவதை  கொள்கை வகுப்பாளர்கள் உணரத் தவறி விட்டதாகத் தெரிகிறது என அவர்  சொன்னார்.fitch1

“பொது நிதிகளில் காணப்படும் பலவீனங்களையும் வரவு செலவுத் திட்ட  பற்றாக்குறையையும் அவசர அவசியமாக சரி செய்ய வேண்டியுள்ளதுடன்  ஒப்பிடுகையில் பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவில் அதிகமான  நீர்மூழ்கிகளையும் போர் விமானங்களையும் வாங்குவது தேவையற்றதாகும்,”  என்றார் அவர்.

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கான அரசாங்க
சீர்திருத்தங்களில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பதைக் காரணம் காட்டி மலேசியாவின் எதிர்காலத்தை ‘நிலைத்தன்மையிலிருந்து’ ‘எதிர்மறையானதாக’
அண்மையில் பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் மாற்றியது.

2012ம் ஆண்டு இறுதியில் அவசர காலப் பொறுப்புக்களைச் சேர்க்காமல் மொத்த அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.3 விழுக்காடாக இருப்பது குறித்தும் அது கவலை தெரிவித்தது.