பள்ளி முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்

prakash raoமாணவர்களிடம் “பாலே இந்தியா டான் சீனா” என்று கூறிய எஸ்எம்கே தலைமையாசிரியர் அதற்காக இன்று மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதை ஷா ஆலம் மஇகா தொகுதி துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ் உறுதிப்படுத்தினார்.

“கல்வித் துறை அதிகாரியுடன் அவரைச் சந்தித்தபோது உறுதிகூறியபடி அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த விவரம் அங்கிருந்தவர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

“அப்போது பெற்றோர் சிலரும் அங்கு இருந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.

தேசியப்பள்ளி ஆசிரியர்கள் இந்திய மற்றும் சீன மாணவர்களை “பாலே இந்தியா, பாலே சீனா” என்று அவர்கள் விரும்பும் போதெல்லாம் கூறி இழிவுபடுத்துவார்கள். மக்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கோரினார் என்று மஇகா தலைவர்களில் யாராவது ஒருவர் அறிவிப்பார். இது வழக்கமான சம்பவம் ஆகும்.

கடந்த வாரம், ஷா அலாம் மேகா தேசியப்பள்ளியின் தலைமை ஆசிரியை யாதி டானி மாணவர்களில் சிலர் சற்று உரத்தHM-Yati Dani குரலில் பேசிக் கொண்டிருந்ததால் சினமடைந்து அவரது  ஆழ்மனதில் பதிந்திருந்த உத்தரவை அப்படியே கொட்டிவிட்டார்: “பாலே இந்தியா டான் சீனா”.  மக்களிடமிருந்து எழுந்த ஆட்சேபங்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை மன்னிப்பு கோரினார் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டது என்று ம இகா  தொகுதி துணைத் தலைவர் ஏ. பிரகாஷ் அறிவித்துள்ளார்.  ஆனால், அப்பள்ளி எந்த ஓர் அறிக்கையையும் ஊடகங்களுக்கு வெளியிட மறுத்து விட்டது.

மஇகா தலைவர்கள் வேண்டுமானால் நாங்கள் மன்னிப்பு கோரியதாக கூறிக்கொள்ளட்டும், அதை ஏன் நாங்கள் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கலாம். மேலும், ஒரு தேசியப்பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்தியர் மற்றும் சீனர்களிடம் மன்னிப்பு கோருவதா, அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதா என்ற மனப்போக்கும் இருக்கலாம். அவ்வாறு நடந்து கொள்வது பீரோ டாட்டா நெகரா (பிடிஎன்) பயிற்சியில் அவர்களுக்குப் போதிக்கப்பட்ட சித்தாந்தத்திற்கு முரணானது என்றும் அவர்கள் எண்ணக்கூடும்.

ஆமாம், இந்திய மற்றும் சீன மாணவர்களை திட்டுவதற்கு, கண்டிப்பதற்கு தேசியப்பள்ளி ஆசிரியர்களுக்கு “பாலே இந்தியா டான் சீனா” என்பது ஓர் முதல் ஆயுதமாக இருப்பது ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.