பெர்க்காசா: ‘புதுக்கிராமம்’ தொடர்பில் நாம்வீ மீது நடவடிக்கை எடுங்கள்

Namwee‘புதுக்கிராமம்’ என்ற திரைப்படம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஆணையிட்ட அரசாங்கத்தை குறை கூறிய நாம்வீ என்ற திரைப்படத்  தயாரிப்பாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்க்காசா  கேட்டுக் கொண்டுள்ளது.

திரைப்படத் தொழில் தொடர்பில் அதிகாரிகள் தங்களது அணுகுமுறையில்  இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதாக நாம்வீ தமது யூ டியூப் பதிவில் கடுமையாகக்  குறை கூறியுள்ளார் என அதன் தகவல் பிரிவுத் தலைவர் ருஸ்லான் காசிம்  சொன்னார்.

“புதுக் கிராமம்” திரைப்படம் ஒரு காலத்தில் இயங்கிய மலாயாக் கம்யூனிஸ்ட்  கட்சியை பற்றியதாக இருந்தாலும் அது வரலாறு என்பதைத் தவிர வேறு  ஒன்றுமில்லை,” என்றும் நாம்வீ குறிப்பிட்டிருந்தார்.

“மூளையில்லாத சில முட்டாள்கள் புகார் செய்ததால் நீங்கள் ஒரு திரைப்படத்தை  தடை செய்ய முடியாது ! அதனை ஏற்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா ?”  எனக் குறிப்பிட்ட நாம்வீ, சர்ச்சையை உருவாக்கியுள்ள இன்னொரு திரைப்படமான  தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ம் தேதி திரையிடப்படவிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தண்டாபுத்ரா திரைப்படம் 1963 மே 13 கலவரங்களைச் சித்தரிக்கும் விதம் குறித்து  குறை கூறப்பட்டதால் கடந்த ஆண்டு பல முறை அதன் திரையீடு தள்ளி  வைக்கப்பட்டது.

‘புதுக் கிராமம்’ படத்தை பொறுத்த வரையில் ஆகஸ்ட் 22ம் தேதி அது
திரையிடப்படுவதாக இருந்தது. அந்தத் திரைப்படம் ‘கம்யூனிசத்தைப் புகழ்கிறது’  என அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் லோக்மான் அடாம்  புகார் செய்ததைத் தொடர்ந்து அதனை மறு ஆய்வு செய்யுமாறு திரைப்படத்  தணிக்கை வாரியத்துக்கு உள்துறை அமைச்சு ஆணையிட்டது.