டிஏபி: பெர்னாமா, என்எஸ்டி மீது துணைப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

muhiaddinநாய் பயிற்றுநர் காணொளிப் பதிவு சர்ச்சை தொடர்பில் துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் முஸ்லிம் அல்லாதார் மீது பழி போடுவதாக தவறான  செய்தியை வெளியிட்ட பெர்னாமா, என்எஸ்டி (நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) மீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இரண்டு செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து வெளியிடும் பொய்களினால்  முஹைடின் ‘பாதிக்கப்பட்டுள்ளார்’ எனத் தாம் நம்புவதாக அவர் இன்று விடுத்த  அறிக்கையில் கூறியுள்ளார்.

“முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையில் பகைமையையும்  வெறுப்புணர்வையும் ஏற்படுத்துவதின் மூலம் இனப் பதற்ற நிலையைத் தூண்டி விட  முஹைடினும் பெர்னாமாவும் என்எஸ்டி-யும் அந்தப் பொய்யைச் சொன்னதாக  டிஏபி நம்புகின்றது.”

“அந்த செய்தி நிறுவனங்களைத் தண்டிப்பதின் மூலம் மட்டுமே மலேசிய நாட்டின்  நிர்மணம், ஒற்றுமை ஆகிய நிலைக் களன்களுக்கு மருட்டலை ஏற்படுத்தும்  பொய்களைப் பரப்புவதை அவை நிறுத்திக் கொள்ளும்,” என்றும் லிம் சொன்னார்.

இதனிடையே  துணைப் பிரதமர் முஹைடின் யாசின், பரவலாக வெளியிடப்பட்டுள்ள தமது ஜுலை  30ம் தேதி சொற்பொழிவில் அண்மைய காலமாக முஸ்லிம் அல்லாதார் பற்றியும்  சர்ச்சைக்குரிய நாய் பயிற்றுநர் காணொளிப் பதிவு பற்றியும் குறிப்பிட்டுச்
சொல்லவில்லை என விளக்கியுள்ளார்.

ஆனால் பெர்னாமா, என்எஸ்டி, சின் சியூ ஆகியவை அவர் அதனைச்
சொன்னதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.