நீதிபதிகளையும் அரசாங்க வழக்குரைஞர்களையும் விலைக்கு வாங்குவதற்கு அன்வார் இப்ராஹிம் 50 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாகக் கடந்த பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக பெர்மாத்தாங் பாவ்-வில் போட்டியிட்ட தோல்வி கண்ட மஸ்லான் இஸ்மாயில் கூறிக் கொள்ளும் குற்றச்சாட்டை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனப் பக்காத்தான் ராக்யாட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தக் குற்றச்சாட்டின் கடுமையைக் கருத்தில் கொண்டு சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் தலைமை நீதிபதி அர்பின் ஸாக்காரியாவும் அதனை விசாரிக்க வேண்டும் என அந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டுள்ளவரும் டிஏபி
தலைவருமான கர்பால் சிங் சொன்னார்.
“மஸ்லான் அந்தக் குற்றச்சாட்டை சொல்வதற்கு முன்னர் எங்களிடம் கருத்து கேட்டிருக்கலாம். அந்தக் குற்றச்சாட்டு எனக்கும் அன்வாருக்கும் மட்டும் எதிரானது அல்ல. நீதித் துறைக்கும் அரசாங்க வழக்குரைஞர்களுக்கும் எதிரானதாகும்,” என அவர் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“சட்டத்துறைத் தலைவர் நீதித் துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று தலைமை நீதிபதியும் நீதித் துறையைத் தற்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் கர்பால்.