சிங்கப்பூர் ஊடகங்கள் பொறாமையால் மலேசிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பெரிதாக்குகின்றன

murderமலேசியா மீது கொண்டுள்ள பொறாமையால் அண்மையில் சில சிங்கப்பூர்  ஊடகங்கள் மலேசியாவில் நிகழ்ந்த சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை முதல்  பக்கச் செய்தியாக பெரிதாக்கி வெளியிட்டுள்ளன என உத்துசான் மலேசியா  சொல்கிறது.

அந்த நாளேட்டின் முதுநிலை ஆசிரியர்களுடைய புனை பெயர் எனக் கருதப்படும்  அவாங் செலாமாட்டின் கட்டுரையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“மலேசியா வரவேற்கிறது- இங்கு மரணம் மலிவானது, உயிருடன் இருப்பது செலவு  மிக்கது” என்னும் தலைப்பின் சிங்கப்பூரில் வெளியாகும் The New Paper என்னும்  ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தி குறித்து அவாங் செலாமாட்  கருத்துரைத்தார்.

மலேசியாவுக்கு எதிரான போட்டி மனப்பான்மை காரணமாக அந்த ஏடு அவ்வாறு  செய்தி வெளியிட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

மலேசியர்கள் அந்த அறிக்கை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் சிங்கப்பூர்  நாளேடுகளின் தலை எழுத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்  அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

“அவை தங்கள் அரசாங்கத்தை குறை கூற முடியாது. ஆகவே பத்திரிக்கைகளை  விற்பதற்கு அண்டை நாட்டை அவை குறியாகக் கொண்டுள்ளன,” என்றார்  அவாங்.