பகுதி 3 – மலேசியாவின் சுதந்திரம் :
மலேசியாவின் சுதந்திரம் எனும்போது அது இரண்டு காலகட்டத்தைக் குறிக்கிறது. முதலில் மலாயா கூட்டரசு பதிமூன்று மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டரசாக 31.8.1957இல் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அடுத்து மலேசிய அமைப்பு. ஆரம்பத்தில் சிங்கப்பூர், சாபா, சரவாக் மலாயா கூட்டரசும் ஒன்று கூடி அமைத்த அமைப்பாகும். சிங்கப்பூர், சாபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது 16.9.1963இல்; 9.8.1965இல் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு விலகியது.
[இதற்கு முன்பு வெளியான பகுதிகள், இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கபட்டுள்ளன]
121(1)ம் சரத்தின் முதலாவது வடிவம்.
மலேசியா அமைக்கப்பட்டபோதும் (சிங்கப்பூர் விலகியப் பிறகும்) அரசியலமைப்புச் சட்டத்தின் 121(1)ம் சரத்தின்படி கூட்டரசின் நீதி பரிபாலன அதிகாரம் சம அந்தஸ்து கொண்ட இரு உயர் நீதிமன்றங்களுக்கு இருந்தது – ஒன்று மலாயா மாநிலங்களில், மற்றது சாபா சரவாக் மாநிலங்களில்.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் 121(1)ம் சரத்தின்படி குடிமக்களுக்கு இடையே அல்லது அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே எழும் எந்தவித தகராறுக்கும் இரு உயர் நீதிமன்றங்களும், தங்களின் நீதி பரிபாலன அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதி வழங்கலாம்.
இந்த 121(1)ம் சரத்து ஒரு பக்கம் இருக்க உயர் நீதிமன்றங்களின் அதிகாரம் எப்படிப்பட்டப் பிரச்சினைகளில் நீதி வழங்க முடியும் என்பதை 1964ம் ஆண்டு நீதி பரிபாலனச் சட்டத்தின் 24ம் பிரிவு விளக்குகின்றது. இந்த 1964ம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம் இஸ்லாமியச் சமய சம்பந்தமான பிரச்சினைகள் குறிப்பாக முஸ்லிம் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சொத்து சம்பந்தமான சிக்கல் ஏதாகிலும் எழுமானால் இஸ்லாமிய நிபுணர்களின் சாட்சியத்தைக் கேட்டு தீர்ப்பு வழங்குவது இயல்பு. இப்படி பல வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றன.
ஷரியா நீதிமன்றங்கள்
31.8.1957ல் மலாயா சுதந்திரம் பெற்றதிலிருந்தும், 16.9.1963ல் மலேசிய அமைப்பு பிரகடனப்பட்டப் பிறகும் இஸ்லாமியச் சட்டத் தொடர்பாக யாதொரு பிரச்சினையும் எழவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் திருமணம், விவாகரத்து, குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற எல்லா கருப்பொருள்களில் மாநிலங்களில் அமைக்கப் பெற்ற ஷரியா நீதிமன்றங்கள் கவனித்துக் கொண்டன.
ஷரியா நீதிமன்றம் முஸ்லீம்களுக்கு இடையே எழும் பிரச்சினைகளை இஸ்லாமியச் சமய கோட்பாடுக்கு இணங்க செயல்பட்டு நீதி பரிபாலனம் செய்யும் நீதிமன்றங்களாகும். அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் வழி அமைக்கப் பெற்ற நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. அதோடு ஷரியா நீதிமன்றங்கள் மாநிலம் தோறும் இயங்கிய போதிலும் அவை மாநிலங்களால் அமைக்கப்பட்டவை.
31 ஆண்டுகள் பிரச்சனை இல்லை
சுமார் முப்பத்தொரு ஆண்டுகள் எந்தச் சிக்கலும் குழப்பமும் நிகழாமல் மதச் சார்பற்ற சிவில் நீதிமன்றங்கள் செயல்பட்டன. ஆனால், சில வழக்குகளில் சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பு இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின் பற்றவில்லை என்ற காரணத்தைக் காட்டி துன் மஹாதீர் முகம்மது அரசு 121(1)ம் சரத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.
121(1)ம் சரத்து திருத்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன் இதனால் கண்டிப்பாக பாதிப்படையக் கூடியவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய அரசு முற்பட்டதற்கான சான்று ஏதும் கிடையாது. நிதிமன்றத்தின் நீதி அதிகாரத்தைக் கட்டுப் படுத்த தீர்மானித்தபோது சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் மன்றம் சமய அமைப்புக்கள் ஆகியவற்றின் கருத்துக்களை அறிந்து கொள்ள முற்படவில்லை. இது ஒரு பெரும் குறையே.
யாரைதான் கேட்டார்கள்? யாரத்தான் நம்புவது?
தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் அபிப்பிராயம் கேட்கப்பட்டதா, அப்படியானால் திருத்தத்தை ஒட்டி அவர்களுடைய நிலைதான் என்ன என்று தெரிந்து கொள்ள முற்படவில்லை. அரசியல் பங்காளிகள் என்கின்றபோது சில அரசியல் நாகரிகம் அவர்களிடையே இருப்பதை ஒப்புக் கொள்ளும் போது அந்த நாகரிகம் பொதுமக்களுக்குக் குழப்பமும், சங்கடமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதையும் உதாசீனம் செய்யமுடியாது.
மக்களாட்சி கோட்பாடு செழிப்புடன் வளர்ந்து நிலைபெற வேண்டுமாயின் நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதை 31.8.1957ஆம் ஆண்டுக்கு முன்பே அம்னோ, மசீச, மஇகா ஒரு மனதாக ஏற்றுக்கொண்ட ஒரு கோட்பாடாகும். அதே கோட்பாட்டை 16.9.1963ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த மலேசியா இணைப்பின் பேச்சு வார்த்தையின் போதும் கொண்டிருந்ததால்தான் அரசியல் சட்டத்தின் 121(1) சரத்தை எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த சரத்துக்குத் திருத்தம் செய்ய நினைத்த போது குறிப்பிடப் பெற்ற சரித்திரப்பூர்வமான வாக்குறுதிகள் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, மஹாதீர் முகம்மது கொடுத்த சுருக்கமான விளக்கத்தை ஏற்றுக் கொண்டு திருத்தத்தை ஏற்றுக்கொண்டது நாடாளுமன்றம்.
வினையால் விளையப்போகும் கொடுமைகள்
இந்தத் திருத்தத்தால் யார் யார் பாதிப்படைவார்கள், எவ்வகையில் பாதிப்படைவார்கள், பாதிப்படைபவர்களுக்கு எப்படிப்பட்ட நீதி கிடைக்கும், உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை எப்படி அமல்படுத்தும் என்பன போன்ற சிக்கலான கேள்விகளையும் அரசு அப்போது கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. விளையப்போகும் கொடுமைகளையும் அது எதிர்பார்க்கவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
121(1) சரத்து திருத்தப்பட்டு, 10.6.1988தைல் அமல்படுத்தப் பெற்றது. இந்தப் புது 121(1)ம் சரத்து சம அந்தஸ்து கொண்ட இது உயர் நீதிமன்றங்களுக்கும் இருக்கும் என்றது. இந்தத் திருத்தத்தின் மூலம் 1988ம் ஆண்டுக்கு முன்பு உயர்நீதிமன்றங்களிடம் இருந்த அதிகாரம் அகற்றப் பெற்றது.
அடுத்து, ஒரு புது சரத்தைத் திணித்தது நாடாளுமன்றம். அதுதான் 121(1A) என்ற எண்ணிடப்பட்ட உட்பிரிவு சரத்து. இந்த உட்பிரிவு சரத்து ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட எந்த விஷயத்திலும் உயர்நீதிமன்றங்களுக்குத் தலையிட அதிகாரம் இல்லை என்று சொல்லிற்று.
அதிகாரத்தை இழந்த உயர்நீதிமன்றம்
இங்கே இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்தின் வழி உயர்நீதிமன்றங்கள் நீதி அதிகாரத்தை இழந்துவிட்டன. இரண்டு, ஷரியா விவகாரங்களில் உயர் நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரம் கிடையாது என்ற நிலை உருவாயிற்று.
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தால் சிருஷ்டிக்கப்பட்டவை. ஷரியா நிதிமன்றங்கள் மாநில அரசுகளால் இஸ்லாமிய விவகாரங்களை அமல்படுத்த சிருஷ்டிக்கப்பட்டவை. சமயச் சாற்பற்ற உயர் (சிவில்) நீதிமன்றங்களின் அதிகாரம் நாடெங்கும் அமல்படுத்தும் தகுதியைக் கொண்டிருக்கிறது.ஷரியா நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களில் மட்டும் தன் அதிகாரத்தைச் செலுத்த முடியும்.
சட்டத்தில் தெளிவு இருக்க வேண்டும் என்ற நோக்கம் நியாயமானதாக இருப்பினும் அந்தத் தெளிவை வியாக்கியானம் செய்யும் போது எந்தக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதும் நியாயமான எதிர்பார்ப்பு மட்டுமல்ல அப்படியொரு குழப்பநிலை உருவெடுப்பதை அரசு தவிர்த்திருக்கவேண்டும்.
உயர்நீதிமன்றங்கள் இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை எப்படி வியாக்கியானம் செய்தன என்று அடுத்த பகுதி 4-இல் பார்ப்போம்.
– தொடரும்.
பகுதி 1 – குழப்பத்திற்கு யார் காரணம்
பகுதி 2 – உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்
ஆதியில் வந்தவன் பாதியில் பறிகொடுத்தான், பாதியில் வந்தவன் அனைத்தையும் கைப்பற்றி விட்டான், நாடும் சட்டமும் இவர்களின் கையில், இவர்கள் சட்டத்தின் வழி சூரியனை மேற்கே உதிக்க உத்தரவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
“நாசமா போகட்டும் இந்த நாடும் நாட்டு மக்களும” என்ற PS வீரப்பா வசனம்தான் ஞாபகம் வருகிறது…
நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் ஆரசியல்வதிகள்! எதிர்கால
சரித்திரம் எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? எனது நாடே எனது மக்களே ஐயகோ!
தமிழை வளர்ப்போம்..இணையத்தில் செதுக்குவோம்..