‘அன்வார்-கர்பால் கடிதம் மீது புகார் செய்யப்பட்டால் எம்ஏசிசி நடவடிக்கை எடுக்கும்

samarajoo1நீதிபதிகளையும் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்களையும் விலைக்கு வாங்குவதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 50 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக கூறப்படுவது மீது பினாங்கு  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு ( எம்ஏசிசி ) இது வரை எந்தப் புகாரும்  கிடைக்கவில்லை என அதன் இயக்குநர் சமராஜு மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

“அந்த விஷயம் தொடர்பில் எனக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. அந்தக்  குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக எந்தப் புகாரையும் நாங்கள் பார்க்கவில்லை,” என  அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சொன்னார்.

“புகார் செய்யப்பட்டால் நாங்கள் அதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.  தேவையானதைச் செய்வோம்,”என்றார் அவர்.samarajoo

“எங்கள் எம்ஏசிசி சட்டத்தின் எந்தப் பிரிவும் மீறப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை  எங்கள் விசாரணைகள் காட்டினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்றும்  சமராஜு சொன்னார்.

அன்வார் கர்பால் சிங்-கிற்கு வழக்குரைஞர் கட்டணமாக 50 மில்லியன்
ரிங்கிட்டுக்கு மேல் கொடுத்துள்ளதாக கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கான  கடிதங்கள் அன்வாருடைய பெர்மாத்தாங் தொகுதியில் விநியோகம்  செய்யப்பட்டுள்ளதாக உத்துசானில் சனிக்கிழமை வெளியான செய்தி குறித்து அவர்  கருத்துரைத்தார்.