அமைச்சர்: சிலாங்கூர் அரசாங்கத்திடம் கேளுங்கள்

dengkilசிலாங்கூர் டெங்கிலில் தங்களது அடுக்குமாடி வீடுகள் இடியக் கூடும் என்ற  அச்சத்தினால் கூடாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், மாற்று வீடுகளைக்  கட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைக் கொடுக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை  வற்புறுத்த வேண்டும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்  அப்துல் ரஹ்மான் டஹ்லான் சொல்கிறார்.

நிலம் கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு மாற்று வீடுகளைக் கட்டிக்  கொடுக்கும் நடவடிக்கையை தமது அமைச்சு தொடர முடியாது என்றார் அவர்.

சிலாங்கூர் அரசாங்கம் அந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக எதனையும்  தெரிவிக்கவில்லை என்பதால் அந்த விவகாரம் தாமதமாகிக் கொண்டே போகிறது  என அவர் மலேசியாகினிக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மாற்று வீடுகளைக் கட்டிக் கொடுக்க  கூட்டரசு அரசாங்கம் உத்தரவாதம் அளித்தால் பொருத்தமான நிலத்தைக் கொடுக்க  தயாராக இருப்பதாக சிலாங்கூர் அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ள போதிலும்  அமைச்சர் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளுக்கு மாற்று வீடுகளைக் கட்டுவதற்கு நிலம் வழங்க  சிலாங்கூர் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை மாநில செயலகம்  கூட்டரசு அரசாங்கத்திற்குக் கடந்த மாதம் அனுப்பியுள்ளதாக அந்த விவகாரத்தைக்  கவனிக்கும் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் வி கணபதிராவ்  மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.