அப்துல்லா: நான் சாமிவேலுவை ஒய்வு பெறச் சொன்னேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்

samy2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து  விலகிக் கொள்ளுமாறு எஸ் சாமிவேலுக்கு தாம் யோசனை சொன்னதாகவும்  ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் முன்னாள் பிரதமர்  அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார்.

“தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்ததற்காக நான்  அவருக்கு வாழ்த்துக் கூறினேன். அவர் இந்திய சமூகத்திற்கு நன்றாகச்  செய்துள்ளார் என்றும் எல்லாம் நன்றாக இருக்கும் போதே அவர் ஒய்வு பெறலாம்  என்றும் நான் அவரிடம் கூறினேன்.”

இவ்வாறு அப்துல்லா தாம் எழுதியுள்ள “விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா  படாவியின் ஆண்டுகள்” என்னும் தலைப்பிலான புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.samy1

“ஆனால் சாமி பிடிவாதமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்பினார்,”  என்றும் அப்துல்லா சொன்னார்.

பிரச்னைகளைக் கையாளுவதில் சாமி பின்பற்றிய வழிகள் பற்றி தாம் குறிப்பாக  மனநிறைவு அடையவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அப்துல்லா, சாமி  தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா தலைவர் என்பதால் அவருடன் கலந்தாய்வு  செய்வதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை என்றார்.

“சில பிரச்னைகளை அவர் கையாண்ட முறை குறித்து நான் முழுமையாக மகிழ்ச்சி  அடையவில்லை. ஆனால் அவர் மஇகா தேர்ந்தெடுத்த தலைவர். அதனால்  அவருக்கு பலவீனங்கள் இருந்தாலும் நான் அவருடன் தான் தொடர்பு கொள்ள
வேண்டும்,” என்றார் அப்துல்லா.

“நான் அவரை வற்புறுத்தினேன். ஆனால் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் நாம்  செய்ய முடிவதற்கும் ஒரு வரம்பு உண்டு.”