டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், நீதித்துறை லஞ்சம் பற்றிய குற்றச்சாட்டுக்களைப் போக்குவதற்காக தமது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
அத்தகைய கோரிக்கைகள் ‘முக்கியமில்லாதவை’ என அவர் குறிப்பிட்டார்.
“முக்கியமில்லாத கோரிக்கைகளுக்கும் முக்கியமில்லாத நபர்கள் வெளியிடும் அறிக்கைகளுக்கும் பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை,” என கர்பால் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கர்பாலும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பினாங்கைச் சேர்ந்த ரஞ்சித் சிங் டில்லன் என்ற வழக்குரைஞரும் கெடா கீத்தா கட்சித் தலைவர் ஜமில் இப்ராஹிமும் கேட்டுக் கொண்டுள்ளதாக நேற்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
2008-க்குப் பின்னர் அன்வார், வழக்குரைஞர் கட்டணமாகவும் நீதிபதிகளுக்கும் அரசாங்க வழக்குரைஞர்களுக்கும் லஞ்சம் கொடுப்பதற்காகவும் கர்பாலுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாக பொதுத் தேர்தலுக்குப் பெர்மாத்தாங் பாவ்-வில் போட்டியிட்டு தோல்வி கண்ட அம்னோவின் மஸ்லான் இஸ்மாயில் இம்மாதத் தொடக்கத்தில் கூறிக் கொண்டிருந்தார்.