தடுப்புக் காவல் மரணங்கள் பற்றி விளக்கும் ஒவியக் கண்காட்சி

art showஅரசாங்க வன்முறைகள், தடுப்புக் காவல் மனித உரிமைகள் பற்றி பொது  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என ‘மரணத்தைக் கொண்டு வரும் தடுப்புக் காவல்’ என அழைக்கப்படும் ஒவியக் கண்காட்சி நம்பிக்கை  கொண்டுள்ளது.

அண்மையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல தடுப்புக் காவல் மரணங்கள் காரணமாக  அத்தகைய கண்காட்சியை பெங் ஹாக்கிற்கான மலேசியர்கள் அமைப்பும் பினாங்கு  சுவாராமும் நடத்துகின்றன.

“அந்த விஷயம் குறித்து குறிப்பாக மரணங்கள் பற்றி பொது மக்களிடையே  விழிப்புணர்வை இந்தக் கண்காட்சி அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என  பெங் ஹாக்கிற்கான மலேசியர்கள் அமைப்பின் தலைவர் இங் யாப் ஹுவா  கூறினார்.

தடுப்புக் காவல் மரணங்கள் அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  ‘பெரும்பாலும் தவறு செய்தவர்கள்’ தண்டனை பெறவில்லை என்றும் அந்த அமைப்பு  தெரிவித்தது.

அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சுவாராம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த  ஆண்டில் மட்டும் 12 தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரே ஒரு  சம்பவத்தில் மட்டும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மே 21ம் தேதி போலீஸ் தடுப்புக் காவலின் போது மரணமடைந்த என்
தர்மேந்திரன் கொலை தொடர்பில் ஒரு மாத காலம் ‘தலைமறைவாக’ இருந்ததாக  கூறப்பட்ட இன்ஸ்பெக்டர் எஸ் ஹரி கிருஷ்ணன் என்ற நான்காவது போலீஸ்  அதிகாரி மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.

உள்ளூர் ஒவியர்கள் வரைந்த அந்த ஒவியங்களில் பாதிக்கப்பட்டவர்களுடைய  தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. பினாங்கு அனைத்துலக சீனப் புத்தகக்  கண்காட்சியை ஒட்டி பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 8ம்  தேதி முதல் 18ம் தேதி வரை காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை
அந்த ஒவியக்  கண்காட்சி திறந்திருக்கும்.