பினாங்கு மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்துள்ள மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று சம்பவங்களும் குண்டர் கும்பல் பகைமையாக இருக்கலாம் எனக் கூறிய அவர், ‘குற்ற நிலவரம் மோசமடைந்து பொது மக்களுடைய பாதுகாப்பு மீது சந்தேகத்தை அவை ஏற்படுத்தியுள்ளன’ என்றார்.
பினாங்கு தலைமைப் போலீஸ் அதிகாரி நிலவரம் குறித்தும் அதனைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் தமக்கு விளக்கியுள்ளதாகவும் லிம் சொன்னார்.
குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு பினாங்கு போலீசில் போதுமான மனித ஆற்றலும் வளங்களும் இல்லாததை மாநில அரசாங்கம் அறிந்துள்ளது என்றார் அவர்.
“அதனால் அதிகரித்துள்ள குற்றங்களை கூட்டாக முறியடிக்க எங்கள் வளங்களைப் போலீஸுக்கு வழங்கவும் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது,” என்றும் பினாங்கு முதலமைச்சர் தெரிவித்தார்.