அன்வார்: பொதுப் (அரசாங்கம்) பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

anwarதமது சொத்துக்களை அறிவிப்பதில் தமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனக்  கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பொதுப் (அரசாங்கம்)  பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பக்காத்தான்  ராக்யாட் மன்றம் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

“பொதுப் பதவிகளை வகிப்பவர்கள் மட்டுமே தங்களது சொத்துக்களை வெளியிட  வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது என்று மன்றம் முடிவு செய்துள்ளதாக  அன்வார் சொன்னார்.

“ஒவ்வொரு நிலையிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்ய  வேண்டியதில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் இன்னும் இரண்டு வாரத்தில் கூடும் பக்காத்தான் ராக்யாட் மன்றக்  கூட்டத்தில் தாம் அந்த விவகாரத்தை எழுப்பப் போவதாக அன்வார் சொன்னார்.

“அந்த முடிவுக்கு பின்னணியில் உள்ள நியாயம் என்ன, எந்த முன்னுதாரணமாவது  உள்ளதா, நாம் அதனைச் செய்ய வேண்டும் என அது சொல்கிறதா.”

“நீங்கள் பொதுப் பதவிகளை வகிக்கும் போது நீங்கள் சொத்துக்களை அறிவிக்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காரணம் அதன் தாக்கம் நீங்கள்  செய்யும் முடிவு மீது உள்ளது,” என பெர்மாத்தாங் பாவ்-வில் தமது நோன்புப்  பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது அன்வார் சொன்னார்.

தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக்  கட்டாயப்படுத்தப் போவதில்லை என அந்த மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவு  பற்றியும் அன்வாரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அன்வார், பொருத்தமான முறையில் மந்திரி புசார் காலித்  இப்ராஹிமுக்கு ஆலோசனை வழங்கப் போவதாகத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் சொத்துக்களை அறிவிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களைப்  பொறுத்ததாகும். அவர்கள் விரும்பினால் சொத்துக்களை அறிவிக்கலாம். அல்லது  வெளியிடாமலும் இருக்கலாம்.anwar1

அன்வார், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட  அனைத்துப் பேராளர்களும் தங்கள் சொத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட  வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளது  பற்றி அன்வார் கருத்துரைத்தார்.

“பொதுப் பதவிகளை வகிப்பவர்கள் மட்டுமே சொத்துக்களை அறிவிக்க வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ அல்ல என நாங்கள்  முடிவு செய்துள்ளோம் என நான் கர்பாலுக்குச் சொல்வேன்.”