நான்கு ‘கொடூரமான’ சட்டங்களின் கீழ் அமைச்சருக்கு கொடுக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் அந்தச் சட்டங்களுக்கு மாற்றாக வரையப்படும் புதிய சட்டங்களின் கீழ் ஒரு குழுவுக்கு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி சொல்கிறார்.
அந்த அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதே அவ்வாறு செய்யப்படுவதின் நோக்கம் என அவர் சொன்னார்.
உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம், வசிப்பிடக்
கட்டுப்பாட்டுச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவை தடுத்து வைக்கும் அதிகாரங்களை உள்துறை அமைச்சருக்கு வழங்குவதால் அவை தவறாகப் பயன்படுத்தப்படாலம் என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளதாக ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“அந்த நான்கு சட்டங்களுக்கு மாற்றாக அமையும் சட்டத்தின் கீழ் அந்த
அதிகாரங்கள் குழு உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும். அதில் அமைச்சர்களாகி விட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட மாட்டார்கள்.”
“போலீஸ், நீதிபதிகள் அல்லது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொழில் நிபுணர்களும் குழுவில் இடம் பெறக் கூடும் என்பதே அதன் அர்த்தமாகும்.”
“தனிப்பட்ட ரீதியில் அல்லாமல் குழுப் பெயரின் கீழ் மதிப்பீடு செய்யப்படும்,” என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நான்கு சட்டங்களில் தேச நிந்தனைச் சட்டம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளது. அதற்குப் பதில் தேசிய இணக்கச் சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.