முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானையும் மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகளையும் நாளை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் பேட்டி காண்பர்.
வழக்குரைஞர் சங்கர நாயர் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார். அவர், இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண்ணான சுச்சியாத்தியை தமது சக பிரதிவாதி வழக்குரைஞர்களான பரம் குமாரஸ்வாமி, ராம் கர்பால் ஆகியோருடன் இணைந்து பேட்டி கண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
“இன்று போலீசார் வீட்டுப் பணிப் பெண்களில் ஒருவரைக் கொண்டு வந்தனர். அவர் இன்னும் ஆடம்பர அடுக்குமாடி வீட்டு உரிமையாளரிடம் வேலை செய்கிறார். இன்னொரு வீட்டுப் பணிப் பெண்ணுடைய நிலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. .”
“நாள அவர்கள் மேலும் இரண்டு சாட்சிகளையும் மூசாவையும் கொண்டு வருவார்கள். மூசா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். நாளை காலையில் தான் திரும்புகிறார்,” என சங்கரா தெரிவித்தார்.
புஸ்ராவி மருத்துவமனை தாதி யாஸிஹான் ஜுசோ, அன்வாருடைய முன்னாள் உதவியாளரும் டிரைவருமான முகமட் கோஹாருல்லா அப்துல் மஜிட் ஆகிய இரண்டு சாட்சிகளை மட்டுமே பிரதிவாதி தரப்பு பேட்டி காண வேண்டும்.
குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது. அப்போது எதிர்வாதம் புரிய வேண்டிய அன்வாருக்கு மூன்று வழிகள் உள்ளன.
அவர் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிக்கலாம், குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து சாட்சியமளிக்கலாம் அல்லது மௌனமாக இருப்பதைத் தேர்வு செய்யலாம்.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி4.30க்கும் இடையில் தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அன்வாருடைய எதிர்வாதத்தைத் தயார் செய்வதற்காக அவரது வழக்குரைஞர்கள் இது வரை 21 சாட்சிகளைப் பேட்டி கண்டுள்ளனர்.
அந்தப் பேட்டிகளின் போது அன்வாரும் உடனிருந்தார்.