‘பன்றித் தலை கெத்துப்பாட்’ குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்

IGPஇஸ்லாத்தை இழிவுபடுத்திய முகநூல் பதிவு ஒன்றுக்குப் பின்னணியில் உள்ள  குற்றவாளியை அடையாளம் காண்பதற்கு போலீசார் புலனாய்வைத்  தொடங்கியுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  அறிவித்துள்ளார்.

“விசாரணைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் அந்த பதிவை  தாம் சேர்க்கவில்லை எனக் கூறியுள்ள போதிலும் போலீசார் அதனை ஆழமாக  ஆராய்வர்,” என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி  வெளியிட்டுள்ளது.

‘அலன் தாங்’ என்ற பெயரில் முகநூலில் சமய உணர்வைத் தூண்டக் கூடிய பதிவு  ஒன்று சேர்க்கப்பட்டது பற்றி காலித் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாளை ஒட்டி lemang, ketupat ஆகியவற்றுடன் பன்றித் தலையும்  அந்தப் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஸ்துலாங் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் சென் கா எங்-கின் உதவியாளரான தாங்,  அந்தப் பதிவு தமக்கு எதிரான ‘சதிநாச வேலை’ என வருணித்துள்ளார்.

அந்தப் பதிவுக்காக தமது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி போலி முகநூல்  கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் தாங் விளக்கினார். அவர் அது குறித்து  போலீசிலும் புகார் செய்துள்ளார்.