மலேசியச் சாலைகளில் 260,000 கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கையை ஜோடிப்பதை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த எண்ணிக்கை உண்மை என்றால் போலீஸ் படையை அகமட் ஸாஹிட் வலுப்படுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
அகமட் ஸாஹிட் உத்துசான் மலேசியாவிடம் வார இறுதியில் தெரிவித்த அந்தத் தகவல் ‘அதிர்ச்சி அளிக்கின்றது’, ‘பெரிதும் மிகைப்படுத்தப்பட்டது’ என்றும் லிம் தெரிவித்தார்.
“மலேசியாவில் போலீஸ் படையினர் எண்ணிக்கை 112,583. மலேசிய ஆயுதப் படைகள் எண்ணிக்கை 124,000. அவை இரண்டையும் கூட்டினால் கூட கிரிமினல்கள் எண்ணிக்கையான 260,000 அதை விட அதிகமாக இருக்கும்.”
“அந்தக் காரணத்துக்காக, குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போலீசாருக்கு உதவுமாறு மலேசிய ஆயுதப் படைகளை மட்டுமின்றி ஐநா அமைதிப் படையையும் கேட்டுக் கொள்ள வேண்டும்,” என லிம் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டார்.