‘பௌத்தர்கள் சூராவில் தியானம் செய்வது இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளது’

surauபௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வதற்கு சூராவைப் பயன்படுத்தியுள்ள  நடவடிக்கை இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளதாக ஜோகூர் இஸ்லாமிய  விவகார மன்றம் கூறியுள்ளது.

“அந்தக் குழு நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு நடப்புச் சட்டங்களைப்  பயன்படுத்தி நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு  மலேசியச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இது நிகழ்ந்திருக்கக்  கூடாது.”

“அவர்களுடைய நடவடிக்கை முஸ்லிம்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதோடு இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியுள்ளது,” என அந்த  மன்றத்தின் ஆலோசகர் நோ காடுட் சொன்னதாக பெரித்தா ஹரியான் இன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டிடத்துக்குள் புத்தர் படம் ஒன்றுக்கு முன்னர் தியானம் செய்த குழு ஒன்றை  பௌத்த பிக்கு ஒருவர் வழி நடத்தியதைக் காட்டும் யூ டியூப் காணொளிப் பதிவு  ஒன்று ஆகஸ்ட் 10ம் தேதி சேர்க்கப்பட்டுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

அந்த காணொளிப் பதிவின் தொடக்கத்தில் ‘சூராவ் களங்கப்படுத்தப்பட்டுள்ளது’  என்றும் அதன் இடம் ஜோகூர் கோத்தா திங்கி, தஞ்சோங் செடிலி என்றும்  குறிப்பிடும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.