லைனாஸை ‘புதைப்பதற்கு’ 300,000 கையெழுத்துக்களைத் திரட்ட பினாங்கு எண்ணியுள்ளது

lynasலைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தை ‘புதைப்பதற்கு ஒரு மில்லியன் கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கு Himpunan Hijau என்ற சுற்றுச்சூழல்  மேம்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பினாங்கிலிருந்து 300,000 கையெழுத்துக்களைப் பெறுவதற்கு அந்த அமைப்பு முயலும் என  அதன் தலைவரும் லைனாஸ் எதிர்ப்புப் போராட்டக் குழுத்  தலைவருமான வோங் தாக் கூறினார்.

பினாங்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, தூய்மையான, பசுமையான
இயக்கங்களுக்கு புகழ் பெற்ற இடமாகும். அதே கோட்பாட்டை வர்த்தகத்திலும்  பின்பற்ற பினாங்கு மாநில அரசாங்கம் முயலுகிறது என்றும் அவர் சொன்னார்.

மாநில அரசாங்கமும் அதன் முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் ஆதரவு   அளிப்பதால் கையெழுத்துக்களில் பெரும்பகுதி நாட்டின் அந்தப் பகுதியிலிருந்து  வரும் என Himpunan Hijau நம்புவதாகவும் வோங் தாக் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் அதாவது மெர்தேக்காவுக்கு ஒரு வாரம் முன்னதாக  300,000 கையெழுத்துக்களைத் திரட்ட இயலும் என நாங்கள் நம்புகிறோம்.  நாட்டின் மாற்றத்துக்கான முன்னுதாரணமாக பினாங்கு விளங்குவதால் அது  முடியுமென என அவர் கொம்தார் கட்டிடத்தில் நிருபர்களிடம் கூறினார்.