அவசர காலச் சட்டம் (EO) போன்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்வதற்காக குற்றச் செயல்களும் துப்பாக்கி வன்முறைகளும் அதிகரிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கத்தின் பிரிவுகள் ‘அனுமதிப்பதாக’ சரவாக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது.
அந்த சந்தேகத்தை நேற்று நிருபர்களிடம் தெரிவித்த மாநில டிஏபி தலைவர் சொங் சியாங் ஜென், 2011ம் ஆண்டு இறுதியில் அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் தடுப்புக் காவல் மய்யங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட ‘கிரிமினல்களை’ கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் தேவை என வலியுறுத்தும் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறிய கருத்துக்களைச் சுட்டிக் காட்டினார்.
“அது ஒர் அரசியல் சதி. காரணம் ஏதும் காட்டாமல் எதிர்ப்பாளர்களையும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளைக் கைது செய்வதற்கும் ஒடுக்குவதற்கும் போலீசாருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கட்டுப்பாடு இல்லாத நிறைய அதிகாரங்களை அந்த அவசர காலச் சட்டம் வழங்குவது நமக்குத் தெரியும்,” என பண்டார் கூச்சிங் எம்பி-யுமான சொங் சொன்னார்.
“அத்தகைய கைதுகளை எதிர்த்து சட்ட நீதிமன்றத்தில் வழக்குப் போடவும் முடியாது,” என்றார் அவர்.