‘தந்தை (‘father’)அகஸ்டஸ் சென்’ அவர்களே நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் ?

DAP.pngகடந்த ஆண்டு நிகழ்ந்த டிஏபி தேர்தல்களில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறிக்  கொண்டு அறிக்கை விடுத்த அகஸ்டஸ் சென் பாதிரியாருடைய அடையாளம்  குறித்த மர்மம் தொடருகின்றது.

பதிவு செய்யப்பட்ட மலேசிய கத்தோலிக்க பாதிரியார்கள் பட்டியலில் அத்தகைய  நபர் யாரும் இல்லை என்பதை நேற்று மலேசிய கத்தோலிக்க ஆயர் மாநாடு  மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியது.

புரோடெஸ்டண்ட், ஆர்த்தோடோக்ஸ் சமூகங்களைப் பிரதிநிதிக்கும் மலேசிய  தேவாலய மன்றம் தந்தை (‘father’) என்னும் பட்டத்தை புரோடெஸ்டண்ட் சமூகம்  பயன்படுத்துவதில்லை எனக் கூறியது. தேசிய இவாஞ்செலிக்கல் கிறிஸ்துவ  மன்றமும் தந்தை (‘father’) என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை எனத்
தெரிவித்தது.

ஆர்த்தோடோக்ஸ் சமூகத்தில் பாதிரியார்களுக்கு அது பயன்படுத்தப்பட்டாலும்  மலேசியாவில் அத்தகைய சீன ஆர்த்தோடோக்ஸ் பாதிரியார்கள் பதிவு  செய்யப்படவில்லை என்றும் தேவாலய மன்றம் கூறியது.

அந்த ‘சென்’ ஒர் ‘ஆவி’ என்றும் ‘பிஎன் கற்பனையில் உதித்த’ வடிவம் என்றும்  டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கை ஆதரிக்காததால் 1,300  பேராளர்களுக்கு கட்சி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல் பற்றிய நோட்டீஸ்  கிடைக்கவில்லை என ‘சென்’ எழுதியுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.