ஒற்றுமை அரசாங்கம் பற்றிய ஊடகத் தகவல்களை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

putrajaya01பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகக் கூறப்படுவதை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது.

ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்கள் பற்றிய ஊடகச் செய்திகள் ” எழுத்தாளருடைய  கற்பனையில் உதித்தவை” என அது கூறியது.

“அன்வாரும் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவமும் 13வது பொதுத் தேர்தல்  முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அவை பற்றி கேள்வி எழுப்பி வருவதால்  ஒற்றுமை அரசாங்கம் குறித்த பேச்சுக்கள் முடியாத காரியம்,” என பிரதமர்  அலுவலகம் இன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி இணையத் தளம் ஒன்றில் வெளியான அந்தத் தகவல்கள் தீய நோக்கம்  கொண்டவை என்றும் அது தெரிவித்தது.

நஜிப் அன்வாருடன் ஒற்றுமைப் பேச்சுக்களை நாடுவதையும் அதற்கு முன்னாள்  இந்தோனிசிய துணை அதிபர் யூசோப் கல்லா நடுவராகப் பணியாற்றுவதையும்  அன்வார் உறுதிப்படுத்தியதாக ஆசியா செண்டினால் இணையத் தளத்தில்  வெளியான செய்திக்கு அந்த அறிக்கை பதில் அளித்தது.

ஒற்றுமை அரசாங்கம் குறித்து எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை  என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.