புதிய தேர்தல்கள் வலியைக் கொடுத்த சிரமமான முடிவு என்கிறார் லிம்

DApசங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) தொடுத்த நெருக்குதலினால் புதிய தேர்தல்களை  நடத்துவது என டிஏபி செய்த முடிவு ‘மிகவும் வலியைக் கொடுத்தது, சிரமமானது’  என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என டிஏபி கருதியதே அதற்குக் காரணமாகும்  என்றார் அவர்.

‘குற்ற உணர்வினால்’ புதிய தேர்தலை நடத்துவது என்று டிஏபி முடிவு செய்ததாக  கூறியுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினை லிம் சாடினார்.

“குற்ற உணர்வு” என்பதற்கு அர்த்தம் அவருக்குத் தெரியுமா ? அதனை அறிந்து கொள்ள அவரை  திரும்ப ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பப் போகச்  சொல்லுங்கள்,” என அவர் கிண்டலாக கூறினார்.

விளையாட்டு இளைஞர் அமைச்சரான கைரி ஆக்ஸ்போர்ட் பட்டதாரி ஆவார்.

ஆர்ஒஎஸ் முடிவு டிஏபி-யை ‘திரிசங்கு’ நிலையில் வைக்கக் கூடிய ‘தீய
எண்ணத்தைக் கொண்ட’ முடிவு என அவர் வருணித்தார். அது டிஏபி நிலைத்திருப்பதற்கு மருட்டலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதனை  அபாயத்தில் வைக்க அதன் தலைவர்கள் விரும்பவில்லை என்றார் அவர்.

“அது ஒரு மனிதர் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. கட்சி முழுவதும்
சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே மிகப் பெரிய அபாயமாகும்.”