‘இன்னொரு அரசியல் சூறாவளியை கிளப்பும் முயற்சி தோல்வி கண்டது’


anwar1ஒற்றுமை அரசாங்கம் குறித்த பேச்சுக்களை முன்மொழிந்தது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிமே தவிர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அல்ல என்று  இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ரமதான் போது மூன்று நிபந்தனைகளுடன் அன்வார் அந்த யோசனைத்  தெரிவித்தார் என RBF Online என்ற வலைப்பதிவை மேற்கோள் காட்டி அது  அந்தச் செய்தியை பிரசுரித்துள்ளது.

அன்வார் துணைப் பிரதமராகப் பொறுப்பேற்பது, நான்கு பிகேஆர் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவது, சிலாங்கூர் மந்திரி புசார் காலித்  இப்ராஹிம் அகற்றப்பட்டு அந்த இடத்துக்கு நஜிப் தேர்வு செய்யும் ஒருவர்  நியமிக்கப்படுவது அந்த மூன்று நிபந்தனைகள் என அந்த வலைப்பதிவு  குறிப்பிட்டது.

நடுவராக பணியாற்றுமாறு முன்னாள் இந்தோனிசியத் துணை அதிபர் யூசோப்  கல்லாவை அன்வார் வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது. PK-JKM என்ற பதிவு  எண்ணைக் கொண்ட தமது தனிப்பட்ட விமானத்தில் ஜுலை 28ம் தேதி இரவு மணி  8.30க்கு மூவருடன் கோலாலம்பூருக்கு வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மூன்று நிபந்தனைகளையும் நிராகரித்து விட்டதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

“நஜிப்பைச் சந்தித்த பின்னர் அந்தத் தகவலை அன்வாரிடம் உடனடியாகத்  தெரிவித்து விட்டு அதே விமானத்தில் மறு நாள் யூசோப் திரும்பினார்,” என்றும்  அந்த வலைப்பதிவில் எழுதப்பட்டுள்ளது.

அந்த விமானம் ஜகார்த்தாவில் இயங்கும் Nusantara Air Charter என்ற வாடகை  விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது என மலேசியாகினி மேற்கொண்ட  சோதனைகளில் தெரிய வந்துள்ளது. மற்ற தகவல்களை உறுதிப்படுத்த  முடியவில்லை.

யூசோப் வழியாக ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்களை நஜிப் தொடங்கியதாக  இதற்கு முன்னர் அன்வார் கூறியிருந்தார்.

ஆனால் அந்தத் தகவலை முற்றாக மறுத்து நேற்று பிரதமர் அலுவலகம் அறிக்கை  வெளியிட்டது.