கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ரவூப்பில் நிகழ்ந்த ‘Himpunan Hijau’ பசுமைப் பேரணி தொடர்பில் 2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நால்வர் மறுத்து விசாரணை கோரினர்.
போலீசார் விதித்த முன் நிபந்தனையை மீறியதாக பேரணி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 65 வயது வோங் கின் ஹுங், 61 வயது தெங்கு ஷாஹாடான் ஜபார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பேரணி நிகழ்ந்த தினத்தன்று அவர்கள் ரவூப் நகராட்சி மன்ற விளையாட்டு வளாகத்தில் இருந்த காற்பந்துத் திடல் ஒன்றிலிருந்து அருகிலிலுள்ள கூட்டரசுக் கட்டிடத்துக்கு பிற்பகல் மணி 2.00க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் அணி வகுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.
43 வயதான லியூ சியூ சியோங், 32 வயதான சான் லாய் யூங் ஆகியோர் மீது போலீசார் விதித்த முன் நிபந்தனையை மீறி பேரணிக்குக் குழந்தைகளை கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
ரவூப் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷாரிஸாட் இஸ்மாயில், அந்த நால்வருக்கும் தலா 3,000 ரிங்கிட் ஜாமீனை அனுமதித்ததுடன் அந்த வழக்கு செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.