EMGS எனப்படும் மலேசியக் கல்வி அனைத்துலகச் சேவை நிறுவனத்தை கலைக்க வேண்டும் என மலேசிய போட்டித் திறன் ஆணையம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த நிறுவனம் பின்பற்றும் வழிமுறைகள் போட்டி நடைமுறைகளுக்கு மாறாக இருப்பதாக அவர் சொன்னார்.
மலேசியாவில் உள்ள அந்நிய மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக 2012ல் EMGS அமைக்கப்பட்டது.
ஆனால் அது தற்போது மருத்துவ, காப்பூறுதித் துறைகளில் ஏகபோகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஒங் நிருபர்களிடம் கூறினார்.
“நிறுவனச் சட்டத்தை மீறி EMGS மருத்துவ சோதனைகளை வழங்கும்
கிளினிக்குகளிலும் தனியார் காப்புறுதியிலும் ஏகபோக ஆதிக்கத்தை உருவாக்கி விட்டது.”
அந்நிய மாணவர்கள் இப்போது அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்குகளில் மட்டுமே சுகாதார சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என EMGS வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 62 கிளினிக்குகளில் 50 ஒரே ஒரு நிறுவனக் குழாமுக்குச் சொந்தமானதாகும். அத்துடன் ஒரே ஒரு நபர் அந்த குழுமத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளதாக ஒங் மேலும் கூறினார்.