மஇகா தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என பழனிவேல் நம்புகிறார்

palaniசெப்டம்பர் 22ம் தேதி நிகழும் மஇகா தலைவர் தேர்தலில் அந்தப் பதவியைத்  தாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஜி பழனிவேல் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

துணைத் தலைவராக டாக்டர் எஸ் சுப்ரமணியமும் எதிர்ப்பின்றி தேர்வு பெறுவார்  எனத் தாம் எண்ணுவதாகவும் அவர் சொன்னார்.

“காரணம் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வலுவான போட்டியாளர்கள்  யாரும் இல்லை,” என இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேல்  தெரிவித்தார்.

ஆரூடங்கள் கூறப்பட்ட போதிலும் தலைவர் பதவிக்கு டாக்டர் சுப்ரமணியம்  போட்டியிட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பழனிவேல் இன்று கோலாலம்பூரில் ஆசிய சுரங்க, எரிசக்தி முதலீட்டு
கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கும் 23 மத்திய செயற்குழு உறுப்பினர்  பதவிகளுக்கும் ‘அதிகமான பேர்’ போட்டியிடுவர் என்றும் அவர் சொன்னார்.

மஇகா தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் செப்டம்பர் முதல்  தேதியாகும். போட்டி இருந்தால் செப்டம்பர் 22ம் தேதி தேர்தல் நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள 4,200 மஇகா கிளைத் தலைவர்கள் கட்சித் தலைவரை  தேர்வு செய்வார்கள். துணைத் தலைவர் மூன்று உதவித் தலைவர்கள், 23 மத்திய  செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை 1500 பேராளர்கள் தேர்வு செய்வர்.

இது வரையில் தலைவர் பதவிக்கு தமக்கு 1,500 நியமனங்கள் கிடைத்துள்ளன  என்றும் நாளை அந்த எண்ணிக்கை 1,800ஐ எட்டும் என்றும் வேட்பாளர்  நியமனங்கள் அடுத்த வாரம் நிறைவடையும் போது அந்த எண்ணிக்கை 3,000  -த்தை தாண்டி விடும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.

மஇகா இப்போது நாடு முழுவதும் 3,988 கிளைகளுடன் மொத்தம் 680,000  உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.