சிலாங்கூர் போலீசார் சிறப்பு நடவடிக்கையின் கீழ் 683 பேரைக் கைது செய்துள்ளனர். 211 பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்

PDRMசிலாங்கூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய Ops Cantas Khas நடவடிக்கையின்  கீழ் இன்று காலை ஆறு மணி வரையில் மொத்தம் 683 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 211 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தத் தகவலை சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஏ தெய்வீகன் இன்று
வெளியிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ‘பல்வேறு குற்றங்களுக்காக’ காவலில்
வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மற்றவர்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர்  விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

பல இடங்களிலும் வாகனங்களிலும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  இன்று காலை தெய்வீகன் நிருபர்களிடம் தெரிவித்ததாக சிலாங்கூர் போலீஸ்  படையின் அதிகாரத்துவ முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.pdrm1

“பாராங்கத்திகள், பொம்மை துப்பாக்கிகள், கத்திகள், தடிகள் (kayu cota) போன்ற  ஆயுதங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டன,” என்றும் அந்தப்  பதிவு தெரிவித்தது.

பொது மக்கள் போலீசாருடன் ஒத்துழைத்து, அந்த நடவடிக்கைகளில் உதவும்  வகையில் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தெய்வீகன்  கேட்டுக் கொண்டார்.

Ops Cantas Khas, சிலாங்கூர், கோலாலம்பூர் சிறப்பு நடவடிக்கையாகும். நாடு  முழுவதும் மேற்கொள்ளப்படும் Ops Cantas நடவடிக்கையிலிருந்து அது  வேறுபட்டதாகும்.

என்றாலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் வன்செயல் குற்றங்களும் அண்மையில் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து சாலைகளிலிருந்து கிரிமினல்களை  விரட்டும் ஒரே நோக்கத்தையே இரண்டு நடவடிக்கைகளும் கொண்டுள்ளன.

Ops Cantas நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 1959ம் ஆண்டுக்கான குற்றச் செயல் தடுப்புச் சட்டத்தை போலீசார் பயன்படுத்தி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் கூறியுள்ளார்.

அந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் சாலைத் தடுப்புக்கள் போடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.