‘மெட்ராஸ் கஃபே’ திரையிடும்முன் சமுக இயக்கங்களுக்கு காட்டுங்கள்!

m2ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய ‘மெட்ராஸ் கஃபே’  படத்தை மலேசியாவில் திரையிடும்முன் அது சார்பாக இங்குள்ள சமூக இயக்கங்களுடன் கலந்து பேசுமாறு உள்துறை அமைச்சு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது சார்பாக கருத்து தெரிவித்த சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர், கா. ஆறுமுகம் இந்தப்படம் சார்பாக தமிழர்கள் இடையே பலத்த கண்டணம் எழுந்துள்ளது. எனவே, இதை திரையிடும்முன் மலேசியாவில் உள்ள சமூக இயக்கங்களிடம் காட்டுவது முரண்பாடுகளை தவிர்க்கும் என்றார். அப்படிக்கோரும் கடிதம் ஒன்றை தாம் உள்துறை அமைச்சுக்கு அனுப்பி உள்ளதாக கூறினார்.      

இந்தப்படம் சார்பாக வெளிவந்துள்ள கருத்துக்கள் சிலவற்றை செம்பருத்தி.காம்  மறுபிரசுரம் செய்கிறது.

madras 21987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை பிண்ணனியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தமிழினத்தை அவமதித்தும், பொய்யான தகவல்களை புனைந்தும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தவறாக சித்தரித்தும் காட்சிகள் உள்ளனவாம். அதாவது இந்திய அமைதிப்படை அங்கு நிகழ்த்திய கொடூரங்களை மறைத்தும், பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் அவர்களை வரச்சொல்லிவிட்டு சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ராஜீவ்காந்தியின் போலி முகத்தை மறைத்தும்(இது இந்திய முன்னாள் ராணுவத்தளபதி சொன்னது) இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சேவின் நிதியுதவியும் கிடைத்திருக்கிறது. ஜான் ஆப்ரஹாம் படப்பிடிப்பின்போதே ராஜபக்சேவை சந்தித்துள்ளான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

முதலில் போராளிகள் மற்றும் தேசியத்தலைவரைப் பற்றிய தவறான சித்தரிப்பு. இலங்கை விஷயத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலத்தவர்க்கு நம் உணர்வுகளைப் புரியவைப்பதே பெரும்பாடு. அதுவும் இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்தே நம் மீதான காழ்ப்புணர்ச்சி திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. மலையாளப்படங்களிலோ, இந்திப்படங்களிலோ நம்மை எவ்வளவு கிண்டலுக்குள்ளாக்கமுடியுமோ அவ்வளவு கிண்டல் செய்வார்கள். மலையாளப்படங்கள் இப்போது பரவாயில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இப்போது வந்துள்ள ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வரை ஒரே பார்வையோடுதான் எடுக்கிறார்கள்.அவர்களிடம் நம் போராளிகளைப் பற்றி நல்லவிதமான சிந்தனை இருக்காது. இந்தப்படம் மேலும் அதற்கு வலுசேர்க்கிறது.

அடுத்து, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய கொடூரங்கள் எவ்வளவு புத்தகங்கள் எழுதினாலும் தீராது. எவ்வளவு பாலியல் வல்லுறவுகள், எவ்வளவு படுகொலைகள், நம்பிக்கை துரோகங்கள்… இந்திய அமைதிப்படையினால் ஈழத்தமிழர்கள் சொல்லமுடியாத துன்பம் அனுபவித்தார்கள். இதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்.

‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியாளர் டேவிட் ஹவுஸ்கோ, ‘வியட்நாமின் மைலாய் என்ற ஊரில் அமெரிக்கா நடத்திய படுகொலைகளை, இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் செய்தது’ என்று எழுதினார்.

நேர்மையாக படம் எடுத்தால் இவை எல்லாவற்றையும்தானே எடுக்கவேண்டும். ஆனால் இவற்றைப் பற்றி படத்தில் ஒன்றுமே இல்லை. ஆக இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு குரல்கொடுக்கும் தமிழகத்தமிழர்களுக்கும் எதிராக திட்டமிட்டு எடுக்கப்பட்ட படைப்பு. இதில் வெட்கமே இல்லாமல் அஜய் ரத்தினம் என்ற தமிழ் நடிகன் நடித்துள்ளான்.

madrasஅடுத்த முக்கியமான விஷயம், நமது மாணவர்கள் போராடும்போது இந்தியா முழுக்க ஆங்காங்கே ஆதரவுக்குரல் எழுந்தது. வைகோ அவர்கள் சாஞ்சி சென்று போராடும்போது அப்போதுதான் இலங்கைப்படுகொலை பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள்(இதுதான் இந்திய ஊடகநேர்மை) தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர். இப்போது இதுபோன்ற ஒரு நேர்மையற்ற படைப்பை ‘உண்மையை ஆராய்தல்’ எனத் தலைப்பிட்டு தேசம் முழுக்க திரையிடுகின்றனர். விளைநிலம் முழுக்க விஷவிதை தூவுவதற்கு ஒப்பான செயல். நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுப்பதன் மூலமே இந்த இந்திய-லங்க-மலையாளி லாபி செய்த திருட்டுவேலையை அம்பலப்படுத்த முடியும். ஈழத்தமிழர்களுக்காக நாடு முழுவதும் எழுந்த ஆதரவுக்குரலை இழக்காமலிருத்தல் அவசியம். அப்போதுதான் அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமன்றி தப்பு செய்தவர்கள் பதில் சொல்லும் காலமும் கனியும்.

எல்லாவற்றிலும் அடித்துக்கொண்டு நிற்கும் தமிழர்கள் இந்த சினிமா விஷயத்திலாவது ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். எதைப் படம் எடுப்பது என்று தெரியாமல் நிற்கிறது பாலிவுட். முதலில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, தமிழர்கள் படிக்காதவர்கள்; ரவுடிகள் என்று சித்தரித்தது. ஹிந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்றது. எம் தமிழன் அதையும் கை தட்டி ரசித்தான். இப்போது நம் உணர்வுப் பிரச்சினையான ஈழவிடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளான் இன்னொருவன். இப்போதும் நாம் அமைதியாக இருந்தால் நாளை வரிசையாக நம்மை இழிவுபடுத்தி படம் எடுத்து நம்மிடமே போட்டுக்காட்டி காசைப் பிடுங்குவான்.

வெட்டி ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த ஜான் ஆப்ரஹாம்க்கு திடீரென சம்பந்தமேயில்லாமல் இலங்கைப் பிரச்சினை பற்றி என்ன அக்கறை?