1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ) கீழ் அனுமதிக்கப்படும் நீண்ட காலத் தடுப்புக் காவல் விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு ஒப்பாகும் என வழக்குரைஞர்கள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
“நாட்டில் அதிகரித்து விட்ட கடுமையான, வன்முறை குற்றங்களை ஒடுக்குவதற்கு பிசிஏ சட்டத்தைப் பயன்படுத்துவது எனப் போலீசார் செய்துள்ள முடிவு குறித்து விடுதலைக்கான வழக்குரைஞர்கள் என்ற அந்த அமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.”
“அவ்வாறு நீண்ட காலம் தடுத்து வைப்பது அதிகமானது தேவையற்றது என நாங்கள் கருதுகிறோம். அது உண்மையில் விசாரணையின்றி தடுத்து வைப்பதாகும் என அந்த அரசு சாரா அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவரான எரிக் பால்சென் கூறினார்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தடுத்து வைக்க உதவும் அந்த “விரிவான அதிகாரங்கள்’ அதிகார அத்துமீறலுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் அவர் அஞ்சுகிறார்.