செட்டேவ் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார் மங்கோலிய அரசாங்கம் தலையிட வேண்டும் என விரும்புகிறார்

setevமங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு கொலையுண்டதின் தொடர்பில் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலைக்  குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முன்னாள் போலீஸ்காரர்களை முறையீட்டு  நீதிமன்றம் விடுவித்துள்ளது குறித்து அல்தான்துயா-வின் தந்தை செட்டேவ் ஷாரிபு  மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.

“அந்தத் தீர்ப்பு மீது மங்கோலிய அரசாங்கம் அறிக்கை விட வேண்டிய நேரம்  வந்து விட்டது,” என்பதைத் தவிர வேறு எதனையும் செட்டேவ் சொல்லவில்லை.

அந்தத் தீர்ப்பை செட்டேவ் எதிர்பார்த்ததாக அறியப்படுகின்றது. இறந்த தமது  புதல்விக்கு நியாயம் கிடைக்க அந்த வழக்கை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு  செல்ல வேண்டும் எனத் தாம் இப்போது உணருவதாக அவர் சொன்னார்.

முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு மீதான அவருடைய எண்ணங்கள் அவரது
மங்கோலிய வழக்குரைஞர் மன்காஸ்ருல் மிஜிடோர்ஜ் வழியாக மலேசியாகினிக்கு  அனுப்பப்பட்டது.

அந்த விவகாரத்தைக் கையாளுவதற்கு மங்கோலிய அரசாங்கத்தின் உதவியை  நாடுவதற்கு செட்டேவ் திட்டமிட்டுள்ளதாகவும் மன்காஸ்ருல் தெரிவித்தார்.