‘நெடிம் நியமனத்துக்கும் பொதுச் சேவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’

nedimசுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கும் பொதுச் சேவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா சொல்கிறார்.

சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் நிர்வாக அமைப்பு வழியாக அந்த நியமனம் செய்யப்படவில்லை என அவர் சொன்னார்.

“உண்மையில் அது தனி ஏற்பாடு ஆகும். அந்தப் பதவி அரசியல் அமைப்புக்குள் வருவதால் நாங்கள் அத்தகைய நியமனத்தை அங்கீகரிப்பதில்லை,” என அவர் புத்ரா ஜெயாவில் அமைச்சுக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

முகமட் நஸ்ரி தமது அமைச்சில் நெடிமை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி கருத்துரைக்குமாறு அதற்கு முன்னர் அலி ஹம்சாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.