ஸாஹிட்டின் திறந்த இல்ல உபசரிப்பும் குண்டர் கும்பல் நடவடிக்கையிலிருந்து விடுபடவில்லை

Zahidஉள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று பாகான் டத்தோவில்  நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்ற குண்டர்கள் ஏற்பாட்டாளர்களிடமிருந்து பாதுகாப்புப் பணம் கோரியுள்ளனர்.

அந்தத் தகவலை அகமட் ஸாஹிட் இன்று வெளியிட்டார்.

“எனது அமைப்புக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து  பாதுகாப்புப் பணம் கோரும் குண்டர்களும் இருக்கின்றனர். அதுவும் உள்துறை  அமைச்சருடைய தொகுதியில் !” என அவர் ஆத்திரத்துடன் கூறினார்.

அகமட் ஸாஹிட் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா  அமைப்புக்களின் பேராளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆகியோர் கலந்து  கொண்ட குற்றத் தடுப்புக் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்துப் பேசினார்.

“சில சமயங்களில் ரகசியக் கும்பல்கள் போலீசாரையும் நடப்புப் பொருளாதார  முறையையும் காட்டிலும் வலுவானதாகத் தெரிகிறது.”

“ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் மீண்டும் தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.  நடப்பு சட்ட அமலாக்க முறைகள் மதிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர்  சொன்னார்.

அகமட் ஸாஹிட் அந்தச் சம்பவம் குறித்து மேல் விவரங்களைத் தரவில்லை.  என்றாலும் சட்ட அமலாக்க முறையை வலுப்படுத்த ஒவ்வொருவரும் குறிப்பாக  ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குவதின் வழி உதவ வேண்டும் என அவர்  கேட்டுக் கொண்டார்.