Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் போலீசார் 1,911 பேரைக் கைது செய்துள்ளனர்

needleகடந்த வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை 1,911 பேரைக் கைது செய்துள்ளது.

மொத்தம் 1,772 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதன் இயக்குநர் நூர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவற்றில் 29 விசாரணைகள் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

அதே வேளையில் போலீசார் 10,410.41 கிராம் ஹெரோயினையும் 6,793.35 கிராம் ஷாபு-வையும் 778.91 கிராம் கஞ்சாவையும் 1,097 எர்மின் 5 மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

போதைப் பொருள் விநியோகத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் Geng 04, Geng 08, Geng 555, Geng Raj, Geng 18 ஆகிய குண்டர் கும்பல்களைச் சேர்ந்த  30 உறுப்பினர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் நூர் ரஷீட் சொன்னார்.

 

“அவர்கள் பேராக், பினாங்கு, கெடா ஆகியவற்றில் சுடும் ஆயுதங்கள்  விநியோகத்திலும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியமும் உள்ளது,” என அவர்  நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.