ஒராங் அஸ்லி மக்கள் தாங்கள் நில உரிமைகளை இழப்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாக்காம்) அறிக்கையை அரசாங்கம் தாமதம் செய்யாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ்-விடம் சமர்பிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ய பணிக் குழு ஒன்று அமைக்கப்படும் என அவர் அப்போது அறிவித்தார்.
சுஹாக்காம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்து வழங்கிய ஒர் அறிக்கையை பணிக்குழு ஆய்வு செய்யும் எனச் சொல்வது பொருத்தமற்றதாகும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.
“அது பொது நிதியும் வளங்களும் விரயம் செய்யப்படுவதற்கு ஒப்பாகும்.”
“பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் பல சவால்களை அந்த அறிக்கை தொட்டுள்ளது” என்றும் அதனால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
பூர்வகுடி நிலங்கள் மீதான பஞ்சாயத்து மன்றத்தை அமைப்பதும் கடந்த காலத் தவறுகளைச் சரி செய்து நிலத்தை திரும்ப கொடுப்பது அல்லது இழப்பீடு கொடுப்பதும் சுஹாக்காம் வழங்கியுள்ள 18 பரிந்துரைகளில் அடங்கும்.