தண்டா புத்ரா திரைப்படத்தில் மே 13 கலவரங்களைச் சூழ்ந்துள்ள நிகழ்வுகள் கற்பனையாக தொகுக்கப்பட்டதால் ‘சமூக குழப்பம்’ ஏதும் ஏற்பட்டால் அதற்குத் தண்டா புத்ரா தயாரிப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மசீச இளைஞர் பிரிவு சொல்கிறது.
அந்தத் திரைப்படத்தில் சிறுநீர் கழிப்பதை காட்டும் காட்சி சீன சமூகத்துக்கு பாதகமான தோற்றத்தை அளித்துள்ளதாக அதன் தலைவர் வீ கா சியோங் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.
அத்துடன் அந்தக் காட்சி முற்றிலு கற்பனை என்பதும் தெளிவாகக்
கூறப்படவில்லை என்றார் அவர்.
” சிறுநீர் கழிக்கும் அந்தக் காட்சியால் திரைப்பட ரசிகர்கள் பாதிக்கப்பட்டு சமூகக் குழப்பம் ஏற்பட்டால் அந்தப் படத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட இயக்குநர் ஷுஹாய்மி பாபாவும் மற்றவர்களும் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் வீ.
கோலாலம்பூர் கம்போங் பாருவில் இருந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் ஹருண் இட்ரிஸ் வீட்டில் இருந்த கொடிக் கம்பத்தின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர் கழிப்பதை அந்தக் காட்சி காட்டியது.
அந்தத் திரைப்படம் கூறிக் கொள்வதை அகமட் ஹபிப் என்ற சாட்சி
நிராகரித்துள்ளார்.
அந்த வீட்டைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பப்பட்டிருந்ததாலும்
ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு காவல் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்ததாலும் அந்தக் கொடிக் கம்பத்தின் மீது யாரும் சிறுநீர் கழித்திருக்க முடியாது என அவர் சொன்னார்.
ஆனால் ஷுஹாய்மி அது குறித்து கருத்துச் சொல்ல மறுத்து விட்டார்.