உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, முதலில் பெர்சே 2.0 இடம் மன்னிப்புக் கேளுங்கள்

“அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்பதை மெய்பிக்க நஜிப், பெர்சேயிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதே வேளையில் அம்பிகா தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு அழைக்கப்பட வேண்டும்.”

 

 

அன்வார்: தேர்தல் குழு “தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியைத் தவிர்க்கும்” தந்திரம்

பல இனம்: பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் பிஎன் அரசாங்கம் ஆகியவற்றின் கடந்த கால  நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அன்வார் இப்ராஹிம் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்.

பெர்சே 2.0 ஆர்ப்பாட்டம் செய்யாமல் தடுப்பதற்கு அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நிறையப் பொய்களையும் அவிழ்த்து விட்டனர். அந்தப் பணியை அவர்கள் இன்னும் தொடருகின்றனர். அவர்கள் பெர்சே 2.0 சட்டவிரோதம் என்று கூடப் பிரகடனம் செய்தார்கள். மஞ்சள் டி சட்டைகளை அணிந்தவர்களைக் கைது செய்தனர்.

ஆனால் பெர்சே 2.0 எதற்காக வாதாடியது? தூய்மையான சுதந்திரமான தேர்தல்களையே அது நாடியது.  தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை பிஎன் விரும்பினால் அது ஏன் பெர்சே 2.0ஐ தடுக்க முயன்றது? அதனை ஏன் சட்ட விரோதம் எனப் பிரகடனம் செய்தது?

பதிவு செய்யப்பட்ட வாக்காளர் விஷயத்தில் பல தில்லுமுல்லுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையமும் அதில் ஒரு தரப்பு. அதற்கு யார் பொறுப்பு என்றாலும் அவர்கள் மீது நாட்டுத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்பதை மெய்பிக்க நஜிப் பெர்சே தலைவர் எஸ் அம்பிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதே வேளையில் அவரது ஏற்பாட்டுக் குழுவை சேர்ந்த சிலர் தேர்தல் சீர்திருத்தம் மீதான தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு அழைக்கப்பட வேண்டும்.

சுஸாகேஸ்: அன்வார் சொல்வதிலும் உண்மை இருக்கக் கூடும். தியோ பெங் ஹாக் விவகாரத்தில் தாம் எதனையும் விட்டு வைக்கப் போவதில்லை என நஜிப் வாக்குறுதி அளித்தார். ஆனால் அரச விசாரணை ஆணைய அறிக்கை வெளியான பின்னரும் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைப் பாருங்கள்.

தேர்தல் முறையை முற்றாகச் சீரமைப்பதற்கு அம்னோ/பிஎன் ஒப்புக் கொள்ளும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் அவை நிறைய விஷயங்களைப் பணயம் வைக்க வேண்டியிருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் தேர்தல் முறையில் உள்ள பல அம்சங்களை அவற்றின் வெற்றி வாய்ப்புக்கள் சார்ந்துள்ளன.

டாக்டர் மகாதீர் முகமட் பதற்றமடையும் போது தான் தேர்தல் சீர்திருத்தத்தில் நஜிப் தீவிரமாக இருக்கிறார் என நான் நம்புவேன்.

அடையாளம் இல்லாதவன்: காலம் மிக முக்கியமானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்.  உண்மையில் சுதந்திரமான தேர்வுக் குழுவை அமையுங்கள். தனது கடமைகளைச் செய்யத் தவறிய தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடந்த விஷயங்களைப் பார்க்கும் போது யார் அவர்களை நம்புவார்கள் ?

கேஎஸ்என்: அன்வார் நீங்கள் சொல்வது சரியே. இல்லை என்றால் நஜிப் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பொருத்தமானவை என்று கருதப்படும் பெர்சே 2.0ன் எட்டுக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு அமலாக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்வுக் குழு 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக முழுமையாக ஆய்வு செய்யலாம்.

அந்த எட்டுக் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடுத்த பொதுத் தேர்தலில் அமலாக்கப்பட முடியாது என்றால் நஜிப் தெரிவித்துள்ள தேர்வுக் குழு யோசனை, தேர்தல் ஆணையம் மீதும் அம்னோ அரசாங்கம் மீதும் தொடுக்கப்படும் நெருக்கடியைத் தவிர்ப்பதாகவே கருதப்படும்.

யாரும் அதனை நம்பவில்லை. அனைத்து இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசிய மக்கள்  குறிப்பாக மலாய்க்காரர்கள் விழித்துக் கொண்டு விட்டனர் என்பதை நஜிப்பும் அம்னோவும் எப்போதுதான் உணருவார்கள்.

இயோக்: தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களை நஜிப் மேற்கொள்வார் என நான் நம்பவில்லை. பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்ப அவர் முயலுகிறார். பெர்சே கோரிக்கைகளை அமலாக்குமாறு பக்காத்தான் ராக்யாட்டும் பொது அமைப்புக்களும் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

எம்வி: அன்வார் அவர்களே,எங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் நீங்கள் ஏன் தேர்தல் சீர்திருத்தம் பற்றிப் பேசவே இல்லை?

மஞ்சள் குத்துச் சண்டைக்காரர்: சீர்திருத்தம் பற்றி பிஎன் அது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். அங்கு தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஆனால் நாடாளுமன்றம் கூடிய விரைவில் கூடும் சாத்தியமில்லை என ஒர் அமைச்சரான நஸ்ரி அப்துல் அஜிஸ் அறிவித்து விட்டார். நஜிப்பின் நல்ல நோக்கத்தையே அவரது சொந்த அமைச்சரே வீழ்த்தி விட்டார்.