சபாஸ் அபாய அறிவிப்பு: டீசல் எண்ணெய் சிந்தியதால் நீர் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

 

1syabasசிந்திய டீசல் எண்ணெய் வினியோகிக்கப்படும் நீரில் கலந்து விட்டதால் சிலாங்கூர் மாநிலமும் கோலாலம்பூரும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று முஷரிகாட் பெக்கலான் ஆயர் சிலாங்கூர் (சபாஸ்) இன்று அபாய அறிவிப்பு செய்துள்ளது.

சிந்திய டீசல் எண்ணெய்யால் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றுக்கான நீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவசர நடவடிக்கை திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் சபாஷ் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பயனீட்டாளர்களுக்கு நீர் வினியோகம் செய்வதற்கு தங்களிடம் தற்போதுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தியுள்ளதாக கூறிய அந்நிறுவனத்தின் அதிகாரி லீ மியாங் கோய், அவசர வினியோகத்திற்கான நீர் ஓர் அளவிற்குள்தான் இருக்கிறது என்று எச்சரித்தார்.

ஏற்பட்டுள்ள நீர் வினியோக நெருக்கடியைச் சமாளிப்பதற்கு உடனடியாக உதவுமாறு சிலாங்கூர் மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு லீ வேண்டுகோள் விடுத்தார்.

பெட்டாலிங், கோலாலம்பூர், கோம்பாக், கோலசிலாங்கூர், உலுசிலாங்கூர் மற்றும் கோலலங்காட் ஆகியவை பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

இன்று (ஆகஸ்ட் 30) காலை மணி 8.00 அளவில் ஒரு டேங்கர் கவிழ்ந்ததால் அது ஏற்றிச் சென்ற டீசல் எண்ணெய் சுங்கை சிலாங்கூரில் சிந்தி விட்டது என்று பெர்னாமா செய்தி கூறுகிறது.

சுத்தப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. ஆனால் பணி முடிவுற நீண்ட காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

மேல் விபரம் பெறுவதற்கு சபாஸ் பயனீட்டாளர் சேவை மையத்தை 24 மணி நேரமும் 1 – 800 – 88 – 5252 எண் அல்லது எஸ்எம்எஸ் 39222 அல்லது சபாஸ் முகப்புத்தகம் அல்லது டிவிட்டர் வழி தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

 

 

TAGS: