தமிழ்ப்பள்ளிகளுக்கு 2,000 ஏக்கர் நிலம்: ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றவில்லை?

மு. குலசேகரன், ஆகஸ்ட் 31, 2013.

   m-kulasegaran2000 ஏக்கர் நிலத்தை பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகிக்கும் என்று இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

  கடந்த இரு வருடங்களாக இந்த நிலம் அரசியல் சார்புடையவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று நான் தொடர்ந்து வாதாடியும் இன்று அந்த நிலம் ஓரிரு அங்கத்தினர்களைத் தவிற மற்ற அனைத்து இயக்குனர்களும் அரசியல் சம்பந்தப் பட்டவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளது மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு சவால் விடுவது போல் உள்ளது.

  இருந்தாலும் அரசு உங்கள் கையில் இருப்பதாலும், உங்களுடைய அரசு குறைந்த வாக்குக்களைப் பெற்றிருந்ததும் கூட நீங்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பதாலும், நீங்கள் சர்வதிகாரத்துடன் செயல்படுவதால் இது போன்ற முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றே.

  ஆனால், தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்லது செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, நிலம் மேம்பாட்டில் தெளிவான, வெளிப்படையான போக்கு தென்படவில்லை என்பது நாளிதழ் செய்திகளிலிருந்து  தெரிகிறது.

நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றி இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை?

   அவர்களின் நிலம்  மேம்பாடு அடைவதற்கு முன்னமேயே ஒரு குறிப்பிட்ட தொகை சீனப்பள்ளிகளுக்குக்காக அதன் மேம்பாட்டளர்களால் கொடுக்கப்படும் பொழுது, ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு அது போன்ற ஏற்பாட்டினை இந்த புதிய அறவாரியத்தால் செய்ய இயலவில்லை?

 சீனப் பள்ளிகளின் ஒப்பந்தப்படி:

ரிம 1.1 மில்லியன் ரிங்கிட்டை (அதாவது மாதம் ஒன்றுக்கு ரிம 91,666) முதல் 4 வருடங்களுக்கு ;

ரிம 3.6 மில்லியன்(அதாவது மாதம் ஒன்றுக்கு  ரிம 300,000) 5 ஆவது வருடத்திலிருந்த்து 20 வருடங்களுக்கு

கிடைக்கும் வகையில் ஏற்பாடாகியிருக்கிறது.

அதே விகிதத்தில் பார்த்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கு

ரிம 880,000 (அதாவது மாதம் ஒன்றுக்கு ரிம 73,330) முதல் 4 வருடங்களுக்கும்

ரிம. 2.88 மில்லியன் (அதாவது மாதம் ஒன்றுக்கு ரிம 240,000 ) 5 ஆவது வருடத்திலிருந்தும்

கிடைக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

  நடவுகள் செய்து 4 ஆண்டுகளுக்குப் பின்புதான் வருமானம் வரும் எனவும், அந்த வருமானத்தின் வழி 134 தமிழ்ப்பள்ளிகளும், இந்திய மாணவர்களும் பயன் பெறுவார்கள் எனவும் வாரிய இயக்குனர்களின் ஒருவரான டத்தோ வீரசிங்கம் கூறியுள்ளார்.

பேராக் மந்திரி புசார், வருமானம் 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பட்சத்தில், அதிலிருந்து 50 % எடுத்து நிலம் மேம்பாட்டுக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதம் உள்ள 50% பணம்தான் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 அப்படி யென்றால்:

முதல் 4 வருடங்களுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கும், இந்திய மாணவர்களுக்கும் ஒரு காசு கூட கிடைக்காது;

இந்த நிலத்தின் பேரில் வங்கியிடம் கடன் வாங்கப்படும்;

• 50 % இலாபம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று சொல்வது விழுக்காடு என்பது மட்டுமே, இவ்வளவு பணம்தான்  என்று உறுதியாக நிர்வாகத்தால் கூற இயலாத நிலைமை.

 பொதுமக்கள். குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறையுள்ளவர்கள், இங்கு நன்கு சிந்திக்க வேண்டிக்  கொள்கிறேன்.

 நமது சகோதர இனமான சீனர்கள் தொடக்க முதலே அவர்களின் பள்ளிக்கு வருமானத்தை இவ்வளவுதான்  என்று உறுதியாகத் தீர்மானித்து அதனைப் பெற்று சீனப்பள்ளிகள் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

 ஆனால், தமிழ்ப்பள்ளிகளோ 4 வருடம் காத்திருக்க வேண்டும். மேலும், இதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கு போய்ச் சேரும் தொகை என்று இந்த பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரிய இயக்குனர்களால் கூறமுடியாத நிலை.

மேலும் ,கடன் வாங்கி இந்த நிலத்தை மேம்படுத்தப் போகின்றபடியால், கடனோடு வட்டியையும் திரும்பக் கட்ட வேண்டுடிய சூழ்நிலை! கடனைக் கட்டி, நிர்வாகச் செலவை கழித்து மீதமுள்ளதுதானே தமிழ்ப் பள்ளிகளுக்குப் போய்ச்சேரும்! இவை எல்லாம் வீரசிங்கத்திற்கு தெரிந்திருந்தும் ஏன் இப்படி செய்கின்றார்?

 ஒரு வேளை, சீனர்களைவிட அதிகமான வருமானம்  கிடைக்கும் என்பது இவரின் கணிப்பா? அதனால் அவர்களைப் பின்பற்றாமல் இவரின் வழி தனி வழியோ?

 ஒரு வியாபார வியூகமோ, நுணுக்கமோ, ஆய்வோ இல்லாமல் ஏதோ ஒரு சுய நல நோக்கோடு செயலில் இறங்கியிருக்கும் இவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இந்திய சமூகத்தினரை ஏமாற்றப் போகிறார்கள்?

 இதில் அங்கம் வகிக்கும் இயக்குனர்கள் இலவசமாக சேவை செய்யப் போகிறார்களா அல்லது சம்பளம் பெற்று வேலை செய்யப் போகின்றார்களா என்ற விவரத்தை வீரசிங்கமோ,  மந்திரி புசாரோ தெளிவு படுத்தவில்லை.

 மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும் இவர்கள் பதில் அளிப்பதில்லை!

 மக்கள் குரலுக்கும் இவர்கள் செவி சாய்ப்பதில்லை. அப்படி என்றால், மக்களுக்கு முன்னுரிமை என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தானா? செயலில் இல்லையா?

TAGS: