போலீஸ்: டிபிகேஎல் பழுது பார்த்தது, உடைக்கவில்லை

DBKL-temple demolition2கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 101 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்படுவதாகக் கூறும் செய்தியை போலீசார் மறுத்துள்ளனர். கோயிலின் அருகில் ஒரு நடைபாதையை சீர்படுத்துவதற்கு ஏதுவாக சில விக்கிரகங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன என்று அவர்கள் கூறுகின்றனர்.

பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டிருக்கும் டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) வேலை முடிவுற்றதும் அந்த விக்கிரகங்களை மீண்டும் அவை இருந்த இடத்திலேயே வைக்கும் என்று டாங் வாங்கி போலீஸ் தலைமை எசிபி ஸைனுடின் அஹமட் கூறினார்.

இன்று காலை மணி 11.00 அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பழுது பார்க்கும் வேலைக்கு தடங்கலாக இருந்ததற்காக மஇகா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் இன்று பின்னேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

“அது மஇகா இளைஞர் பிரிவுக்கும் டிபிகேஎல்லுக்கும் இடையில் ஏற்பட்ட வெறும் தவறான புரிந்து கொள்ளுதல் என்று நாங்கள் கருதுகிறோம்.

“அவர்கள் (மஇகா இளைஞர் பிரிவு) கோயிலை டிபிகேஎல் உடைக்க விரும்புவதாக எண்ணி விட்டனர்”, என்று கூறிய அவர், அதன் பின்னர் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் பழுது பார்க்கும் வேலை தொடர்ந்தது என்று மேலும் கூறினார்.

-பெர்னாமா