புதிய கல்வி செயல்திட்டம் தாய்மொழிப் பள்ளிகளைப் பாதுகாக்கும்

1 dpmதாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். புதிய கல்வி செயல்திட்டத்தில்  அவை பாதுகாக்கப்படும்.

இன்று புதிய தேசிய கல்வி செயல்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சீன, தமிழ்ப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுவதற்கு கல்விச் சட்டம் 1966 (பகுதி 28) உத்தரவாதம் அளிப்பதைத் துணைப் பிரதமருமான முகைதின் சுட்டிக்காட்டினார்.

இப்போது  பள்ளிகள் செயல்படும் முறைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் அமைச்சுக்கு இல்லை.

“அவற்றின் இருப்புக்கு என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டதில்லை”, என்றாரவர்.

எல்லா பள்ளிகளும் தரமான கல்வி வழங்க தொடர்ந்து சம உரிமை பெற்றிருப்பதும் உறுதி செய்யப்படும்.

தேசிய கல்வி செயல்திட்டம்,  மலேசிய கல்விமுறையின் தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. இப்போது பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் உள்ளது. சிறார்களில் 96 விழுக்காட்டினர் தொடக்கநிலைப் பள்ளிகளில் பயில்கிறார்கள். 81 விழுக்காட்டினர் இடைநிலைப் பள்ளிகளில் பயில்கின்றனர். ஆனால், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில்  மலேசிய மாணவர்களின் தரம் அனைத்துலகத் தரத்துக்கு ஈடாக இல்லை. மிகவும் தாழ்ந்துள்ளது.

1 eduசெயல்திட்டம், 2017-க்குள் பள்ளி பாடத் திட்டத்தைப் புதுப்பிப்பதற்கும்  கணிதம், அறிவியல் பாடங்களை பகாசா மலேசியாவில் கற்பிப்பதற்கும் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தின் தரத்தை உயர்த்துவதற்கும் அழுத்தம் கொடுக்கும். மாணவர்கள் மூன்றாவது மொழி ஒன்றை- சீனம், தமிழ், அரபு, ஸ்பேனிஷ், பிரெஞ்ச், ஜப்பானிய மொழி- கற்பதற்கும் ஊக்கமளிக்கப்படும். ஆனால், இது படிப்படியாகத்தான் அறிமுகப்படுத்தப்படும்.

ஆங்கிலம் கற்பிக்கும் தரத்தை உயர்த்த சுமார் 9,000 ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி அளிக்கும்.

பகாசா மலேசியா, ஆங்கிலம் ஆகியவற்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கும்படியும் பள்ளிகளுக்குப் பணிக்கப்படும். முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்புவரையுள்ள மாணவர்கள் அப்பாடங்களில் அடையும் தேர்ச்சி ஆண்டுக்கு இரண்டு தடவை மதிப்பிடப்படும்.

இச்செயல்திட்டத்தின் வழி 10,000 தேசிய பள்ளிகளிலும் இணையதளம்வழி கல்வி கற்கும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றவர் சொன்னார்

ஆசிரியர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகைதின், “இது ஆசிரியர்களின் வேலைப்பளுவையும் குறைக்கும்”, என்றார். அத்துடன் ஆசிரியர்கள் பணி உயர்வு பெறும் வாய்ப்புகளும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“அடுத்த ஐந்தாண்டுகளில் 4,000 பள்ளி முதல்வர்கள் அல்லது தலைமையாசிரியர்கள் பணி ஓய்வு பெறுவர். அவர்களின் இடங்களை நிரப்ப வேண்டி இருக்கும்”.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் உயர்தகுதி கொண்ட 30 விழுக்காட்டினர் மட்டுமே ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள் நிர்வாகப் பணிகளுக்கு அனுப்பப்படுவர்.

300-பக்கக் கல்வி செயல்திட்டதை அரசாங்க வலைத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வி செயல்திட்டம் குறித்து ஆண்டுதோறும் முன்னேற்ற அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும். அத்துடன் மொத்த திட்டமும் 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் மறுஆய்வு செய்யப்படும்.