சீனர் சங்கங்கள்: முகைதின் சொல்வது உண்மையல்ல

1 blueprintஒரு திடீர் திருப்பமாக, கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் பஹாசா மலேசியா பாடத்துக்குத் தாய்மொழிப் பள்ளிகள் கூடுதல் நேரம் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறியிருப்பதை மூன்று சீனர் சங்கங்கள் மறுத்துள்ளன.

ஜியாவ் ஜோங், ஹுவா ஜோங், பள்ளித் தலைமையாசிரியர் தேசிய சங்கம் ஆகிய மூன்றும்,  பஹாசா மலேசியா கற்பிக்கும் நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 240 நிமிடங்களாகக் கூட்டுவதற்குத் தாங்கள்  ஒப்புக்கொண்டதாக முகைதின் கூறுவது உண்மையல்ல எனக் கூறின.

துணைப் பிரதமரின் அறிக்கை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதில் உண்மை இல்லை”, என இன்று பிற்பகல் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அவை தெரிவித்துள்ளன.

பஹாசா மலேசியா பாடத்துக்கு 210 நிமிடங்கள் என்பதே அவர்களின் பரிந்துரையாகும்.

இது, கடந்த செவ்வாய்க்கிழமை முகைதினைச் சந்தித்தபோது அவரிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது  என்றும் அவை கூறின. அச்சந்திப்பின்போது 730 சீனத் தொடக்கநிலைப் பள்ளிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும் அவரிடம் வழங்கப்பட்டது.

தங்கள் பரிந்துரையைப் பரிசீலிப்பதாக முகைதின் உறுதி அளித்தார் என அவை தெரிவித்தன.

“அச்சந்திப்பில் அமைச்சரின் பரிந்துரை நாங்கள் ஏற்கவில்லை. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திலும் பஹாசா மலாயு கற்பித்தலுக்கான நேரம் மீதி ஓர் இணக்கம் காணப்படவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவித்திருந்தோம்.”

இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவை தெரிவித்தன.

மசீச-வும் எதிர்க்கிறது

இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங்,  பஹாசா மலேசியா கற்பித்தல் நேரத்தைத் தவிர்த்து மற்றபடி செயல்திட்டம் “கனக் கச்சிதமான” ஒரு திட்டம்தான் என்றார்.

பஹாசா மலாயு கற்பிக்க 210 நிமிடங்கள் எனச் சீனர் கல்விச் சங்கங்கள் பரிந்துரைத்துள்ளன. அதுவே, மசீச-வின் நிலைப்பாடுமாகும் என்றாரவர்.