மாற்றரசுக் கட்சி அதன் நிழல் அமைச்சரவையை அறிவிக்க வேண்டும் என்று கோருவதற்கு முன்பு பாரிசன் மாற்றரசுக் கட்சிக்கு முறையான மதிப்பை அளிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி அறிவுரை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிகளை மதிப்பதும், மாற்றரசுக் கட்சி தலைவருக்கு அப்பதவிக்கு உரிய அனைத்து உரிமைகளையும் சலுகைகளும் வழங்குவதும் அதில் அடங்கும் என்றாரவர்.
பக்கத்தான் ரக்யாட் அதன் நிழல் அமைச்சரவையை அறிவிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் கைரி ஜமாலுடின் விடுத்த கோரிக்கைக்கு எதிர்வினையாற்றிய அப்துல் அசிஸ் பாரி அவ்வாறு கூறினார்.
“இரு கட்சி ஆட்சி முறை செயல்படுவதற்கான அடித்தளம் அமைக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் அது முக்கிய பங்காற்றுவதை கைரி உறுதிபடுத்த வேண்டும்”, என்று அப்துல் அசிஸ் பாரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
பக்கத்தான் ஆட்சி புரியும் மாநிலங்களில் பொதுக் கணக்கு குழு தலைவர் பதவியை மாநில மாற்றரசுக் கட்சிக்கு அளித்த முன்மாதிரியை அவர் சுட்டிக் காட்டிய அவர், ஆனால் பாரிசான் அதனை ஏற்க மறுத்து விட்டது என்று மேலும் கூறினார்.
“இங்கு, கைரிக்கு இதர கடமைகள் இருக்கின்றன – மாநில மாற்றரசுக் கட்சி என்ற முறையில் அம்னோ அதன் பங்கை ஆக்கரமாக ஆற்றுவதை உறுதி செய்ய வேண்டும்”, என்றாரவர்.

























