பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின்

muhyiddin-yassin(இச்செய்தி பழையது என்றாலும், மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 வெளியிடப்பட்டுள்ள வேளையில் இது தாய்மொழிப் பள்ளிகள் மீதான கல்வி அமைச்சர் முகதின் யாசினின் நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது.)

தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை.

இது நாங்கள் இப்பள்ளிகளை  ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம், அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?’, என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கின் கேள்விக்கு பதில் அளித்தபோது கூறினார்.

தாய்மொழிப்பள்ளியை மூடுவது சட்டவிரோதமாகும்

10ஆவது மலேசிய திட்ட மீதான விவாத்தை முடித்து வைத்து ஆற்றிய உரையின்போது, கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கிவைத்திருக்கிற நிலத்தை தாய்மொழிப்பள்ளிகளுக்கு அளிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது என்று தியோ நீ சிங் கூறியிருந்த குற்றச்சாட்டை கல்வி அமைச்சர் முகைதின் மறுத்தார்.

ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதிலிருந்து தாய்மொழிப்பள்ளிகளுக்கு நிலம் கொடுக்கப்படாததற்கான காரணம்  நிலத்திற்கான முன்னுரிமைகள்தான் என்றார் கல்வி அமைச்சர்.

“தாய்மொழிப்பள்ளிகளை நாங்கள் ஓரங்கட்டவில்லை. ஆனால் நாங்கள் தேசிய கல்வி அமைவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாங்கள் தாய்மொழிப்பள்ளிகளை மதிக்கிறோம். அவை செயல்படுவதை நாங்கள் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ இல்லை. உண்மையில், தாய்மொழிப்பள்ளிகளை ஓர் அமைச்சர் மூடுவது சட்டவிரோதமானதாகும்.

” இப்போத்தைக்கு மட்டுமில்லாமல் நீண்டகால தேவைக்காக அந்த நிலங்கள் தேசியப்பள்ளிகளுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை தாய்மொழிப்பள்ளிகளுக்குக் கொடுத்து விட்டால், தேசியப்பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நேரத்தில் அதிக விலையுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும்”, என்று மேலும் கூறினார்.

பள்ளிக்கான நிலத்தை தாங்களாகவே தேடிக்கொள்ள வேண்டும்

அதிகமான மாணவர்கள் இருக்கும் இடத்திற்குத் தாய்மொழிப்பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு இடம் வழங்க மறுக்கும் கல்வி அமைச்சின் கொள்கைப் பற்றி அமைச்சரிடம் தியோ நீ சிங் முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார்.

“வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய விரும்பும் அனைத்துப் பள்ளிகளும் தாங்களாகவே நிலத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். கல்விக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் நிலத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த நிலத்தை ஏன் அவர்கள் பயன்படுத்தக்கூடாது? இதுதான் ஒரே மலேசியாவா? தேசியப்பள்ளிகள் அந்த நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, ஏன் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் அவ்வாறு செய்ய முடியாது?”, என்று அவர் கேட்டார்.

அத்துடன், (தாய்மொழிப்)பள்ளிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் தியோ குற்றம் சாட்டினார்.

நிலம் கொடுக்க மறுப்பது தாய்மொழிப்பள்ளிகளுக்கு அமைச்சு ஆதரவு அளிக்கவில்லை என்று அர்த்தமாகாது என்றார் முகைதின். மாறாக, தேசியப்பள்ளிக்கு அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறுதான் சீன மற்றும் தமிழ் சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட முறையில் நியாயம் இல்லை என்ற கூற்றை மறுத்த முகைதின் யாசின், சீன மற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரிம1.8 பில்லியனைச் செலவிடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் அமைச்சர்.

“நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை…இது நாங்கள் இப்பள்ளிகளை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம், அவர்கள் தங்களுடைய இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?”, என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கேட்டார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு இதற்கு முன்பு அரசாங்கம் நில விவகாரங்களில் உதவாமல் இருந்ததில்லை என்று கூறிய அவர், “உலுசிலாங்கூரில் ஒரு சீனப்பள்ளிக்கான நிலத்திற்கு ரிம3 மில்லியனை நானே நேரில் சென்று கொடுத்தேன்”, என்றார்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு                     

முகைதினின் அதே உரையின்போது, கல்வி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை பள்ளியிலுள்ள மாணவர்களின் விழுக்காடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியம் குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வினவினார்.

லிம்மின் ஆலோசனையை நிராகரித்த அமைச்சர் முகைதின், “நாம் கட்டமைப்பைப் பார்க்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பதல்ல. நாம் 5.6 மில்லியன் மாணவர்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால், முழுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும்”, என்றார்.