அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார். ஈரானின் மீதான சமீபத்திய தாக்குதலில் வாஷிங்டனின் (அமெரிக்கா) பங்கு குறித்து, அரசாங்கப் பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் சுமூகமான உறவைப் பேண அரசு அதிகாரிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட ஷாரெட்ஸான் ஜோஹான் (PH-Bangi), நிர்வாகத்தில் உறுப்பினராக இல்லாத எம்பிக்கள் அமெரிக்க தூதரக நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு வலுவான அரசியல் செய்தியை தெரிவிக்க முடியும் என்று கூறினார்.
“நாங்கள் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்க தூதரகத்தின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வகிக்காத பின்வரிசை எம்பிக்களாக இருப்பதால், ஒருவேளை நாங்கள் அங்கு செல்லாமல் இருப்பதே நல்லது,” என்று அவர் தெரிவித்தார்.
“அவர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதில் நாம் கலந்துகொள்ள வேண்டாம். அவர்கள் செய்துகொண்டிருப்பதை எங்களால் இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இதன் மூலம் நாம் காட்ட முடியும்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வழங்கிய அமைச்சர் அறிக்கையின் மீது, சுஹைசான் காயாட் (PH-Pulai) விவாதித்துக் கொண்டிருந்தபோது, ஜசெக (DAP) உறுப்பினர் குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்.
ஷாரெட்ஸானின் இந்த யோசனையைத் தான் ஏற்றுக்கொள்வதாக சுஹைசான் கூறினார்.
கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீர் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல அரபு நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
-fmt
























