விலங்குகளிடம் முஸ்லிம்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் – சுல்தான்

சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா, தெருவிலங்குகள் மற்றும் வனவிலங்குகள் உட்பட அனைத்து விலங்குகளிடமும் முஸ்லிம்கள் எப்போதும் நற்செயல்களைச் செய்து, கருணை காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட அல்லாவின் படைப்புகளிடம் கருணை என்ற தலைப்பிலான வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின் உள்ளடக்கங்களை மக்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூர் அரண்மனை அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், பூமியின் பொறுப்பாளர்களாக விளங்கும் மனிதர்கள் விலங்குகள், தாவரங்கள், மலைகள், கடல்கள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பொறுப்புடன் பராமரிக்கவும், பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்று சுல்தான் ஷராஃபுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இவையாவும் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையின் அடையாளங்களாகும்; எனவே, அவற்றின் நிலைத்தன்மை பாதுகாக்கப்பட்டு அரவணைக்கப்பட வேண்டும்.

மேலும், மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் கருணை மற்றும் பொறுப்புணர்வின் கொள்கைகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும், என்றும் அவர் விவரித்துள்ளார்.

விலங்குகளிடம் கருணை காட்டுவதை இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள் பெரிதும் வலியுறுத்தியுள்ளார் என்றும், விலங்குகளுக்கு உணவும் நீரும் வழங்கி அவற்றை நன்றாக நடத்துவதையே இஸ்லாம் தன் பின்பற்றுபவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது; அல்லது குறைந்தபட்சம், அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எந்தவொரு விலங்கையும் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர் வலியுறுத்தினார்.

இருப்பினும், வனவிலங்குகள் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதோ அல்லது சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் போதோ நிலைமை மாறுபடுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், தீங்குகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இஸ்லாம் அனுமதிக்கிறது; இது உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாத்தல் என்ற மகாசித் ஷரியா’வின்நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது, என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

விலங்குகளிடம் கருணை காட்டுவதும், மனிதப் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்றும், மாறாக இவை இரண்டுமே எல்லாவற்றையும் அதற்குரிய சரியான சூழலில் வைக்கும் இஸ்லாமிய போதனைகளின் அழகின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.

 

 

-fmt