முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன், 2019-ஆம் ஆண்டு முதல் தானும் தனது குடும்பத்தினரும் ஈட்டிய அனைத்து சொத்துக்கள் பற்றிய விவரங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தாபா நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இந்த நடைமுறை “நேரடியானது” என்றும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கை நியாயமானது என்றும் கூறினார். இருப்பினும், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சொத்து பிரகடன அறிவிப்பைப் பெறுவதற்காக, மைனராக (சிறுவனாக) இருக்கும் தனது மகன் MACC தலைமையகத்திற்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவர்களின் கோரிக்கைக்கு நான் கட்டுப்படுவேன், அவர்கள் கேட்பது நியாயமானது என்றே நான் நம்புகிறேன். யாராவது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால், அசாதாரணமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அவர்கள் ஆராய்வதற்கான வழி இதுவே ஆகும்.
MACC-ன் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி விவரங்களைச் சமர்ப்பிப்பேன் என்றும், அதேவேளையில் அவர்களிடம் வழங்குவதை ஊடகங்களுக்கும் வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் எங்களிடம் என்ன இருக்கிறது என்பது ஊடகங்களுக்கும் தெரியவரும். நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று இன்று காலை புத்ராஜயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சொத்துக்களை பிரகடனம் செய்யக் கோரும் அறிவிப்புகளைப் பெறுவதற்காக, சரவணன் இன்று காலை சுமார் 9.15 மணியளவில் தனது மனைவி, 24 வயது மகள் மற்றும் 12 வயது மகனுடன் MACC தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார்.
முன்னதாக, செப்டம்பர் 28 அன்று சரவணன், அவரது மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் (MACC Act 2009) பிரிவு 36-இன் கீழ் அறிவிக்கை (notice) வழங்கப்படும் என்று எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் கூறியிருந்தார்.
வெளிநாட்டில் இருக்கும் சரவணனின் மற்றொரு குழந்தைக்கு இந்த அறிவிப்பு நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம், 2022-ஆம் ஆண்டில் நிறுவனம் ஒன்றுக்கு வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை ஒப்புதல் அளிப்பதற்காக ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளின் மீது மஇகா துணைத் தலைவரான அவர் குற்றமற்றவர் என வாதாடினார்.
மனிதவள அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், TYKB Engineering Sdn Bhd நிறுவனத்தின் 1,000 வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை ஒப்புதல் அளிப்பதற்கான தூண்டுதலாக, மூன்று தனித்தனி தவணைகளில் இந்தப் பணத்தைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முறைமை மற்றும் விவேகம் குறித்த கேள்விகள்
இன்று காலை தனது மகன் அங்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த சரவணன், நடக்கும் அனைத்து சம்பவங்களாலும் தனது மகன் பள்ளிக்குச் செல்ல பயப்படுவதாகக் கூறினார்.
“இந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது, மக்கள் அவனைக் கேலி செய்து, திட்டி, வம்பிலுத்தால், அவனுக்கு ஏதேனும் நேர்ந்தால் என்னவாகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவன் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மிகவும் மோசமானது. இது தேவையில்லாத ஒன்று,” என்று அவர் கூறினார்.
இன்று MACC அதிகாரிகள் தனது மகன் எதிலும் கையொப்பமிடத் தேவையில்லை என்று கூறியதையடுத்து அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
“இந்த முடிவை முன்னரே எடுத்திருக்கலாம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று காலை முன்னதாக, சரவணனின் குடும்ப வழக்கறிஞர் ஆர். தினாலன் பேசுகையில், சிறுவனை வரவழைக்க வேண்டும் என்ற MACC-ன் முடிவு, முறைமை, விவேகம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணைகளின் போது குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது
குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது என்றார்.
இந்த அறிவிப்பை சரவணனின் வீட்டிலேயே வழங்கி இருக்கலாம். 12 வயது சிறுவனை ஏன் MACC தலைமையகத்திற்கு நேரில் அழைத்து வர வேண்டும்?
இந்த விவகாரத்தில் குழந்தையின் தொடர்பை ஹலீம் ஏன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டபூர்வத் தகுதி இல்லாமை
சொத்து பிரகடன செயல்பாட்டில் ஒரு சிறுவனைச் சேர்ப்பதைச் சட்டம் தடுக்கவில்லை என்றாலும், அது பொருத்தமானது என்று அர்த்தமாகிவிடாது என்று தினாலன் கூறினார்.
“அத்தகைய அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, அதைச் செயல்படுத்தும் ஒவ்வொரு முறையும் பொருத்தமானது என்று ஆகிவிடாது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும், அந்தச் சிறுவனுக்கு அறிவிப்பைப் பெறுவதற்கோ அல்லது அதை ஏற்பதற்கோ சட்டபூர்வத் தகுதி இல்லை என்பதையும் தினாலன் சுட்டிக்காட்டினார்.
1971-ஆம் ஆண்டின் பெரும்பான்மை வயது சட்டத்தின் கீழ் (Age of Majority Act 1971), மலேசியாவில் பெரும்பான்மை வயது 18 ஆகும். 12 வயது சிறுவனால் சட்டப்பூர்வமாக ஒப்பந்தங்களில் ஈடுபடவோ, சட்டப்பூர்வ வாக்குமூலங்களைச் செயல்படுத்தவோ அல்லது பிரிவு 36 அறிவிப்புகளின் கீழ் குற்றவியல் தண்டனைகளுடன் கூடிய கடுமையான 30 நாள் காலக்கெடுவுக்குக் கட்டுப்படவோ முடியாது.
சிறுவனின் சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும், MACC சட்டத்தின் பிரிவு 36(1)(b)-ன் கீழ் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரிடம் வழங்கப்படுவதே சரியான நடைமுறையாகும்.
இந்த விதிமுறையானது, விசாரணையின் முதன்மைப் பொருளாக இருக்கும் பெற்றோருக்கு, அவர்களின் குழந்தைகள், துணைவியார் அல்லது ப்ராக்ஸிகளின் (proxies) பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரகடனம் செய்ய சட்டப்பூர்வமாக வழிகாட்டுகிறது என்று அவர் கூறினார்.
பிரிவு 36-ன் படி, இந்த அறிவிப்புக்கு இணங்குவதற்காக ஒரு சிறுவன் MACC தலைமையகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதா என்றும் தினாலன் கேள்வி எழுப்பினார்.
முறையான காரணம் ஏதுமின்றி, இந்த வயதில் உள்ள ஒரு குழந்தையை மிகவும் கடுமையான சட்ட அமலாக்க முகமையின் தலைமையகத்திற்கு வரக் கட்டாயப்படுத்துவது, குழந்தை நல வழிகாட்டுதல்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் 2001-ஆம் ஆண்டின் குழந்தைச் சட்டத்தை மீறுவது போலாகும்.
“அவர் என்ன கூறுமாறு கேட்கப்படுகிறார் என்பதையும், உறுதிமொழியுடன் ஒரு அறிக்கையை வழங்குவதன் விளைவுகளையும் அவர் உண்மையாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் MACC-யிடம் உள்ளனவா?” என்று அவர் கேட்டார்.























